பூட்டி வைக்கப்பட்டுள்ள பாலூட்டும் அறை திறக்கப்படுமா?
உடுமலை மத்தியபஸ் நிலையத்தில் பூட்டிக்கிடக்கும் பாலூட்டும் அறையை திறக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பாலூட்டும் அறை
உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சுற்றுப்புற கிராமங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.அதன் மூலமாக பல்வேறு பணிகளுக்காக நாள்தோறும் பொதுமக்கள் உடுமலைக்கு வந்து செல்கின்றனர். இந்த சூழலில் பச்சிளம் குழந்தைகளுக்கு பெண்கள் பாலூட்டுவதற்கு ஏதுவாக பஸ் நிலைய வளாகத்தில் தனியாக அறை கட்டப்பட்டது.
சிறிது காலம் செயல்பட்டு வந்த அந்த அறை பயன்பாட்டில் இல்லாமல் பூட்டி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் பெண்கள் குழந்தைகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி பஸ்நிலைய வளாகத்தில் பெண்களுக்கு தனியாக சுகாதார வளாக வசதியும் ஏற்படுத்தித் தரவில்லை. இதனால் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
பூட்டி வைக்கப்பட்டுள்ளது
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
கிராமத்தில் இருந்து உடுமலை நகருக்கு வருகின்ற பெண்கள் பல்வேறு பணிகளை முடித்துக்கொண்டு திரும்பவும் வீட்டுக்கு செல்வதற்கு மத்திய பஸ் நிலையத்தில் காத்திருக்க வேண்டி உள்ளது. இதில் கர்ப்பிணி மற்றும் கை குழந்தையுடன் உள்ள பெண்களும் அடங்குவர்.
பிரசவத்துக்கு பின்பு சிகிச்சைக்காக பச்சிளம் குழந்தைகளை கொண்டு வரும் தாய்மார்கள் பயன் பெறும் வகையில் பாலூட்டும் அறை கடந்த 2015-ம் ஆண்டு கட்டப்பட்டது. சிறிது காலம் செயல்பாட்டில் இருந்த அந்த அறை போதிய பராமரிப்பு இல்லாமல் நகராட்சி நிர்வாகத்தால் நீண்ட காலமாக பூட்டியே வைக்கப்பட்டு உள்ளது.
சுகாதார வளாகம்
இதனால் கைக்குழந்தை மற்றும் பச்சிளம் குழந்தைகளுடன் உடுமலைக்கு வருகை தருகின்ற கிராமத்து பெண்கள் அவதிக்க உள்ளாகி வருகிறார்கள். இதுகுறித்து நிர்வாகத்தில் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கபடவில்லை. இதன் காரணமாக அந்த அறை கட்டப்பட்டதற்கான நோக்கமும் மக்களின் வரிப்பணமும் வீணாகி வருகிறது. மேலும் ஆண்களுக்காக கட்டப்பட்ட சுகாதார வளாகமும் பராமரிப்பில்லாமல் கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது.
இதனால் பஸ்சுக்காக காத்து கொண்டுள்ள கர்ப்பிணிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே நகராட்சி நிர்வாகத்தினர் உடுமலை பஸ் நிலையத்தில் செயல்படாமல் உள்ள பாலூட்டும் அறையை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். அதுமட்டுமின்றி பெண்களுக்கு தனியாக சுகாதார வளாகம் அமைத்து கொடுப்பதுடன் பராமரிப்பில்லாமல் உள்ள ஆண்களுக்கான சுகாதார வளாகத்தை சீரமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்