புதுச்சேரியில் 11-வது நாளாக தொடரும் பால் தட்டுப்பாடு
புதுவையில் 11 ஆவது நாளாக பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பால் வாங்கமுடியாமல் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
புதுவை,
புதுவை மாநில மக்களின் முதல் தேர்வாக பாண்லே பால் உள்ளது. இந்த பால் நாளொன்றுக்கு 1 லட்சத்து 5 ஆயிரம் லிட்டர் மக்களின் தேவையாக உள்ளது. ஆனால் கடந்த மாதம் 80 ஆயிரம் லிட்டர் மட்டுமே பால் சப்ளை செய்யப்பட்டது. இதனால் கடுமையான பால் தட்டுப்பாட்டால் மக்கள் திண்டாடினார்கள்.
வெளிமாநிலங்களிலும் பால் வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. ஏனெனில் வெளி மாநிலங்களில் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்ட நிலையில் கூடுதல் விலை கொடுக்க முடியாமல் பாண்லே நிர்வாகம் தள்ளாடியது.
இந்த நிலையில், புதுவையில் 11 ஆவது நாளாக பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பால் பூத்துகளுக்கு வழங்கப்படும் பால் சப்ளையின் அளவும் குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் பூத்துகளுக்கு வரும் பால் உடனடியாக விற்று தீர்ந்து விடுகிறது. எனவே தனியார் பாலை அதிக விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
வெளிமாநிலங்களில் பால் கொள்முதல் செய்வது தொடர்பாக அதிகாரிகளுக்கு இடையே மோதல் இருந்து வருவதாகவும், அவர்களுக்கு இடையே ஒற்றுமை ஏற்படும் வரை பால் தட்டுப்பாடு இருந்துகொண்டேதான் இருக்கும் என்று ஊழியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.