மின்மயானம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
திருப்பூர் வாவிபாளையம் குடியிருப்பு பகுதியில் மின்மயானம் அமைக்க ெபாதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து மேயரிடம் முறையிட்டனர்.
மின்மயானம்
திருப்பூர் வாவிபாளையம், திருமுருகன் நகர், ஜெய்ஸ்ரீநகர், தத்துவஞானி நகர், காமாட்சிநகர், பெத்தேல் சிட்டி, பாப்பநாயக்கனூர், நல்லகட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் நேற்று காலை திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். தங்கள் பகுதியில் மின்மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் மேயர் தினேஷ்குமாரை சந்தித்து மனு கொடுத்து முறையிட்டனர். அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
வாவிபாளையம்-பாப்பநாயக்கனூர் ரோட்டில், குடியிருப்பு பகுதியில் மின்மயானம் அமைப்பதை கண்டிக்கிறோம். குறைந்த இடவசதி உள்ள இடத்தில் கழிவுநீரை கூட அகற்ற வழியில்லாத இடத்தில் மின்மயானம் அமைக்கக்கூடாது. வாவிபாளையம் பகுதியை சேர்ந்த மக்கள் காலம்காலமாக அடக்கம் செய்வதற்காக அந்த இடத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.
கைவிட வேண்டும்
அந்த இடத்தில் மின்மயானம் அமைத்தால் அடக்கம் செய்ய இடமில்லாமல் போகும். வாவிபாளையத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் தூரத்தில் ஏற்கனவே மின்மயானம் இருக்கும்போது, மீண்டும் புதிதாக மின்மயானத்தை அமைப்பதை கைவிட வேண்டும். சம்பந்தப்பட்ட இடத்தில் மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர் வசதி, சாக்கடை கால்வாய் வசதி, தார் சாலை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.
இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக மேயர் தினேஷ்குமார் கூறினார்.