சிமெண்டு ஆலைகள் மூலம் வசூல் செய்யப்படும் கனிம நிதிகள் அரியலூர் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படவில்லை-பா.ம.க. குற்றச்சாட்டு
சிமெண்டு ஆலைகள் மூலம் வசூல் செய்யப்படும் கனிம நிதிகள் அரியலூர் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படவில்லை என பா.ம.க. குற்றம்சாட்டியது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பா.ம.க. செய்தி தொடர்பாளரும், சமூக நீதிப் பேரவை தலைவருமான வக்கீல் பாலு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜெயங்கொண்டம், அரியலூர் பகுதியில் சோழர் பாசன திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் 2 நாள் விழிப்புணர்வு நடைப்பயணத்தை மேற்கொண்டார். இத்திட்டத்திற்கான அரசின் முதல் கட்ட பணிகள் தொடங்கி இருப்பது வரவேற்கத்தக்கது. இந்தநிலையில் இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்த வலியுறுத்தி மார்ச் மாதத்தில் 5 லட்சம் கையெழுத்து இயக்கத்தை பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அரியலூர், ஜெயங்கொண்டத்தில் தொடக்கி வைக்க உள்ளார். சுற்றுச்சூழல் மாசுபாட்டால் உலக அளவில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதின் அவசியத்தை உணர்ந்த பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சுற்றுச்சூழல்துறைக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
அரியலூரில் 7 சிமெண்டு ஆலைகள் உள்ளன. சிமெண்டு ஆலைகள் மூலம் வசூல் செய்யப்படும் கனிம நிதிகள் மாவட்டத்தின் அடிப்படை கட்டமைப்பு, நீர் ஆதார மேம்பாடு, மக்களுக்கான அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதில் முறையாக பயன்படுத்தப்படவில்லை. இந்தநிலையில் இந்த நிதி மற்ற மாவட்டங்களில் அரசின் திட்டங்களுக்காக பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது. எனவே மாவட்டத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு கனிம நிதியை சோழர் பாசன திட்டத்திற்கு பயன்படுத்த வேண்டும். ஜெயங்கொண்டம் பாதாள சாக்கடை திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். ஜெயங்கொண்டம் பகுதியில் சிப்காட் தொழிற்சாலை அமைக்க வேண்டும். அதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும். ஆண்டிமடம் பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும். நீதிமன்ற வளாகம் அமைக்க வேண்டும். விவசாயிகள் பயன்பெறும் வகையில் முந்திரி தொழிற்சாலை அமைக்க வேண்டும். ஜெயங்கொண்டம் கழுமலை நாதர் கோவிலில் உள்ள தெப்பக்குளத்தை தூர்வாரி தூய்மைப்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதுடன் கோவில் தெப்பக்குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நகரில் உள்ள அனைத்து ஏரிகளையும் தூய்மைப்படுத்தி தூர்வாரி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். நீர் நிலைகளை உயர்த்தும் வகையில் பொன்னேரி, பாண்டியன் ஏரி உள்ளிட்ட ஏரிகளுக்கு தா.பழூரிலிருந்து பொன்னாற்று வாய்க்கால் மூலம் பழைய வாய்க்கால்களை மீண்டும் தூர்வாரி தண்ணீர் கொண்டு வந்து விவசாய பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் வகையில் தண்ணீரை தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலில் சென்று வீணாக போகும் தண்ணீரை ஆங்காங்கே தடுப்பணைகள் மூலம் தடுத்து விவசாய பயன்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும். ஜெயங்கொண்டம் நகராட்சி 21 வார்டுகளிலும் தூய்மை பணியை முறையாக செய்ய வேண்டும். கும்பகோணத்திலிருந்து ஜெயங்கொண்டம் வழியாக விருத்தாச்சலம் செல்லும் வகையில் ரெயில் போக்குவரத்து ஏற்படுத்த வேண்டும். ஜெயங்கொண்டம் நகரப் பகுதிகளில் அனேக இடங்களில் மின் விளக்குகள் பற்றாக்குறை உள்ளதால் அனைத்து மின்விளக்குகளையும் பழுது நீக்கி தரமான மின்விளக்குகளை எரிய விட வேண்டும். ஜெயங்கொண்டம் பகுதியில் அனைத்து வார்டுகளுக்கும் பாரபட்சம் இன்றி நிதி ஒதுக்கி தேவையானவற்றை செய்து கொடுக்க வேண்டும். ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் பயணிகள் இருக்கைகள் இல்லாததால் பெரும்பாலான பயணிகள் தரையில் அமர்ந்தும், நின்று கொண்டும் உள்ளனர். குறிப்பாக மாணவிகள் சிரமப்படுகின்றனர். எனவே கூடுதல் இருக்கைகள் அமைத்து பயணிகள் அமரும் வகையில் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.