மணல் கடத்திய மினி லாரி பறிமுதல்; டிரைவர் கைது
மணல் கடத்திய மினி லாரி பறிமுதல் செய்யப்பட்டு, டிரைவர் கைது செய்யப்பட்டார்.
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார் விக்கிரமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். விக்கிரமங்கலம்-அரியலூர் சாலையில் பாப்பாத்தி ஏரி அருகே அவர்கள் சென்றபோது எதிரே வந்த மினி லாரியை மறித்து சோதனை செய்தனர். இதில் அந்த மினி லாரியில் மணல் ஏற்றப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், கோவிந்தபுத்தூர் பகுதியில் இருந்து வி.கைகாட்டி பகுதிக்கு மணல் கடத்தப்பட்டதும், அந்த மினி லாரியை டிரைவர் கோவிந்தபுத்தூர் கீழத்தெருவை சேர்ந்த சிவராஜ்(வயது 32) ஓட்டி வந்ததும், மினி லாரியில் மணலை ஏற்றி அனுப்பி வைத்தது கோவிந்தபுத்தூர் பகுதியை சேர்ந்த கருப்பையன் மற்றும் ராமச்சந்திரன் என்பதும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு சிவராஜை கைது செய்து, மினி லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் மற்ற 2 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.