மினிலாரி கவிழ்ந்து ரூ.2 லட்சம் வாத்து முட்டைகள் சேதம்
கோவில்பட்டி அருகே மினிலாரி கவிழ்ந்து ரூ.2 லட்சம் வாத்து முட்டைகள் சேதம் அடைந்தது.
கோவில்பட்டி:
தஞ்சாவூர் பகுதியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு மினி லாரி ஒன்று வாத்து முட்டைகளை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் இரவு கிளம்பியது. மினி லாரியை கள்ளக்குறிச்சி மாவட்டம் வடமருதூர் கிராமத்தைச் சேர்ந்த மனோஜ் குமார் (வயது 32) ஓட்டி வந்தார். அவருடன், அதே ஊரைச் சேர்ந்த பால்ராஜ் (28) உதவியாளராக வந்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புதூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் வந்தபோது மினிலாரி திடீரென நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியில் இருந்த ரூ. 2 லட்சம் மதிப்புள்ள 26 ஆயிரம் வாத்து முட்டைகள் சேதம் அடைந்தன. விபத்தில் மினி லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேரும் காயமின்றி தப்பினர். இந்த விபத்து குறித்து நாலாட்டின்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அந்த சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.