"திட்டமிட்ட காலத்தில் சுரங்கம் தோண்டும் பணிகள் முடிக்கப்படும்" மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தகவல்
மெட்ரோ 3,4,5-வது வழித்தடங்களில் வேலைகள் தீவிரமாக நடந்து வருவதாகவும், திட்டமிட்ட காலத்தில் பணிகள் நிறைவு செய்யப்படும் என்றும் மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை,
சென்னையில் மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரை 3-வது வழித்தடத்தில் 45.4 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்படுகிறது. இதில் உயர்த்தப்பட்ட பாதையில் 19 ரெயில் நிலையங்களும், சுரங்கப்பாதையிலும் 28 மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்கப்படுகிறது. அதேபோல் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பணிமனை வரை 4-வது வழித்தடத்தில் 26.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் பாதை வருகிறது.
இதில் உயர்த்தப்பட்ட பாதையில் 18 ரெயில் நிலையங்களும், சுரங்கத்தில் 9 ரெயில் நிலையங்களும் கட்டப்பட்டு வருகிறது. மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரை அமைக்கப்படும் 5-வது வழித்தடத்தில் உயர்த்தப்பட்டப்பாதையில் 39 ரெயில் நிலையங்களும், சுரங்கப்பாதையில் 6 மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
23 சுரங்கம் தோண்டும் எந்திரங்கள்
2-ம் கட்டப்பணியில் அமைக்கப்படும் 3 பாதைகளில் 23 சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. இதில் முதல் எந்திரம் மாதவரம் பால்பண்ணையில் இருந்து வேணுகோபால் நகரில் பணியை முடித்து வெளியே வந்து உள்ளது. தொடர்ந்து ஒவ்வொரு எந்திரங்களாக பணியை நிறைவு செய்ய இருக்கிறது.
இதில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதில் கலங்கரை விளக்கத்தில் இருந்து மயிலாப்பூர் நோக்கி சுரங்கம் தோண்டுவதற்கான எந்திரம் அடுத்த மாதம் மெரினா கடற்கரைக்கு கொண்டு வரப்பட உள்ளது. தொடர்ந்து மெரினா கடற்கரை மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து சுரங்கம் தோண்டும் பணியை வருகிற ஆகஸ்டு மாதம் தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
சவாலான போக்குவரத்து
அதேபோல் திருவான்மியூரில் சுரங்கப்பாதை அமைப்பதற்கு முன்பாக ரெயில் நிலைய பாக்ஸ் அமைக்கப்பட வேண்டும். தற்போது திருவான்மியூர் பகுதியில் போக்குவரத்து பெரிய சவாலாக இருக்கிறது. இதனால் ரெயில் நிலைய சுற்றுச்சுவர் கட்டி முடிப்பதில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இருந்தாலும் வருகிற 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் சுரங்கம் தோண்டும் பணியை தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் பணிகள் நடந்து வருகிறது. அதேபோல் திட்டமிட்ட காலத்தில் பணிகள் நிறைவு செய்யப்படும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறினர்.