ரூ.3¾ கோடியில் நவீன தொழில்நுட்ப மையம்
உடுமலையில், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில்ரூ.3¾ கோடியில் கட்டப்பட உள்ள நவீன தொழில்நுட்ப மைய கட்டிடம் கட்டுமான பணிகளுக்கு அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.
அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்
உடுமலையில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் சார்பில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது. தற்போது உடுமலை கொழுமம் சாலையில் கண்ணமநாயக்கனூர் பிரிவில் உள்ள தனியாருக்கு சொந்தமான வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் இந்த தொழிற்பயிற்சி மையத்தில் பொருத்துனர் (பிட்டர்), மின்சார பணியாளர் (எலக்ட்ரீசியன்), கம்பியாள் (ஒயர் மேன்),மோட்டார் மெக்கானிக், பற்ற வைப்பவர் (வெல்டர்) ஆகிய பாடவகுப்புகள் உள்ளன. இதில் வெல்டர் பாடம் ஒரு வருடபடிப்பாகும். மற்ற பாடங்கள் 2 வருட படிப்பாகும்.
வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் இந்த அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு உடுமலை எலையமுத்துர் சாலையில் உள்ள அரசு கலைக்கல்லூரிக்கு எதிரே தமிழ் நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் இடத்தில்ரூ.5 கோடியே 67 லட்சத்தில் சொந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த தொழிற்பயிற்சி நிலையத்தை கடந்த மாதம் (ஆகஸ்டு) 1-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து விரைவில், அரசினர் தொழிற்பயிற்சி மையம் இந்த புதிய கட்டிடத்தில் செயல்பட உள்ளது.
நவீன தொழில் நுட்ப மையம்
வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் தமிழ் நாட்டில் உள்ள 71 அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களிலும் டாட்டா நிறுவனத்துடன் இணைந்த தொழில் 4.0 என்ற நவீன தொழில் நுட்ப மையம் கட்டப்பட உள்ளது. அதன்படி உடுமலையில் கடந்தமாதம் திறக்கப்பட்டுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் ரூ.3 கோடியே 73லட்சம் செலவில் இந்த நவீன தொழில்நுட்ப மையம்கட்டப்பட உள்ளது.
இந்த நவீன தொழில் நுட்ப மைய கட்டிட கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நேற்று மாலை நடந்தது.செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி ஆகியோர் அடிக்கல் நாட்டினர். திருப்பூர் டி.ஆர்.ஓ.ஜெய்பீம், உடுமலை ஆர்.டி.ஓ..ஜஸ்வந்த்கண்ணன், தி.மு.க.திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயராமகிருஷ்ணன், வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இல.பத்மநாபன், உடுமலைநகராட்சி தலைவர் மு.மத்தின், உடுமலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மு.மகாலட்சுமி முருகன், தி.மு.க.உடுமலை தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் செந்தில்குமார், கணக்கம்பாளையம் ஊராட்சி தலைவர் லதா என்கிற காமாட்சி அய்யாவு, உடுமலை ஒன்றிய ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவர் டி.சவுந்தரராஜன், உடுமலை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ஆர்.ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.