தூய்மைக்கான மக்கள் இயக்கம் திட்டத்தை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் திட்டத்தை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
திருப்பூர்
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் திட்டத்தை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
தூய்மைப்பணி
திருப்பூர் மாநகராட்சி தென்னம்பாளையம் மார்க்கெட் மற்றும் வடக்கு உழவர் சந்தை பகுதிகளில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் எனும் திட்டத்தின் கீழ் தூய்மைப்பணி நேற்று காலை நடைபெற்றது. கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தூய்மைப்பணியை தொடங்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் கூறியதாவது:-
திருப்பூர் மாநகராட்சியை தூய்மை மாநகராட்சியாக மாற்றும் வகையில் ஒவ்வொரு மாதமும் 2-வது, 4-வது சனிக்கிழமைகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
குப்பையை தரம் பிரித்து 'என் குப்பை-என் பொறுப்பு-என் நகரம்- எனது பெருமை' என்ற செயலை அனைத்து பொதுமக்களுக்கும் கொண்டு சென்று திருப்பூர் மாநகரை தூய்மையாகவும், திடக்கழிவு மேலாண்மை பெருமைமிக்க மாநகராகவும் மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். குப்பையை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
உறுதிமொழி ஏற்பு
நிகழ்ச்சியில் தென்னம்பாளையம் பகுதியில் உள்ள வடக்கு உழவர் சந்தை மற்றும் வாரச்சந்தை பகுதியில் மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பங்களிப்புடன் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பயன்பாடு தடை குறித்து விழிப்புணர்வு மற்றும் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் தென்னம்பாளையம் மார்க்கெட் பகுதியில் விழிப்புணர்வு தூய்மை உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் பாலசுப்பிரமணியம், மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் இல.பத்மநாபன், கோவிந்தராஜ், கோவிந்தசாமி, உமா மகேஸ்வரி, கவுன்சிலர்கள் ராதாகிருஷ்ணன், கணேசன், தி.மு.க. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜ், தன்னார்வலர்கள், தூய்மை பணியாளர்கள், தொண்டு நிறுவனத்தினர், மார்க்கெட் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.