ஆன்லைன் பருத்தி பஞ்சு வர்த்தகத்துக்கு தடை விதிக்க வேண்டும்


ஆன்லைன் பருத்தி பஞ்சு வர்த்தகத்துக்கு தடை விதிக்க வேண்டும்
x

ஆன்லைன் பருத்தி பஞ்சு வர்த்தகத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று தொழில்துறையினர் சந்திப்பு நிகழ்ச்சியில் மத்திய இணை மந்திரி எல்.முருகனிடம், தொழில்துறையினர் கோரிக்கை வைத்தனர்.

திருப்பூர்

ஆன்லைன் பருத்தி பஞ்சு வர்த்தகத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று தொழில்துறையினர் சந்திப்பு நிகழ்ச்சியில் மத்திய இணை மந்திரி எல்.முருகனிடம், தொழில்துறையினர் கோரிக்கை வைத்தனர்.

தொழில்துறையினருடன் சந்திப்பு

மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை மத்திரி எல்.முருகன் நேற்று திருப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். காலையில் திருமுருகன்பூண்டியில் உள்ள ஓட்டலில் ஊராட்சி தலைவர்களை சந்தித்து உரையாடினார். பின்னர் இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டுமான பணிகளை ஆவர் ஆய்வு செய்தார். பின்னர் பாளையக்காட்டில் விநாயகர் சதுர்த்தியையொட்டி அன்னதானம் மற்றும் பெண்களுக்கு சேலை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பிறகு திருப்பூர் தொழில்துறையினருடன் சந்திப்பு நிகழ்ச்சி திருப்பூரில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மத்திய இணை மந்திரி எல்.முருகன் தலைமை தாங்கினார். பா.ஜனதா வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் வரவேற்றார். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம், துணை தலைவர் ஆம்ஸ்ட்ராங் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் தொழில்துறையினர் தெரிவித்த கருத்துக்கள் விவரம் வருமாறு:-

ஆன்லைன் வர்த்தகம்

டீமா சங்க தலைவர் முத்துரத்தினம்:-

பின்னலாடை தொழிலுக்கு முக்கிய மூலப்பொருளாக பஞ்சு உள்ளது. பஞ்சு விலை உயர்வால் நூல் விலை அதிகரித்து விட்டது. தற்போது 70 சதவீத தொழில்கள் திருப்பூரில் முடங்கி விட்டன. 90 சதவீதம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தான் திருப்பூரில் உள்ளன. நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தி பின்னலாடை தொழிலை காப்பாற்ற வேண்டும்.

நூற்பாலைகள் சங்கத்தினர்:-

ஆன் லைன் வர்த்தகத்தால் பஞ்சு விலை உயர்த்தப்படுகிறது. நூற்பாலைகளுக்கு பஞ்சு கிடைப்பதில் சிரமம் இருப்பதால் நூல் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் பருத்தி பஞ்சு வர்த்தகத்துக்கு தடை விதிக்க வேண்டும். இந்திய பருத்திக்கழகம், பருத்தியை கொள்முதல் செய்து நூற்பாலைகளுக்கு வழங்க வேண்டும்.

பின்னலாடை வாரியம்

விசைத்தறி உரிமையாளர் சங்கத்தினர்:-

கோவை, திருப்பூர் பகுதியில் 2 லட்சம் விசைத்தறிகள் உள்ளன. விசைத்தறிகளை நவீனப்படுத்துவதற்கு, மேம்படுத்துவதற்கு மத்திய அரசு உதவ வேண்டும்.

டெக்பா ஸ்ரீகாந்த்:-

வெளிநாடுகளில் இருந்து எந்திரங்களை இறக்குமதி செய்தால் டப் திட்டத்தில் மானியம் திருப்பி வழங்கப்பட்டது. அதில் சிக்கல் உள்ளது. திட்டங்களை அரசு செயல்படுத்தினாலும், அதிகாரிகள் அவற்றை முறையாக செயல்படுத்த மறுக்கிறார்கள். உரிய தொகை திருப்பிக் கிடைக்க வசதி செய்ய வேண்டும்.

லகு உத்யோக் பாரதி அமைப்பினர்:-

திருப்பூரில் பின்னலாடை வாரியம் அமைத்துக்கொடுத்தால் தொழில்துறையினரின் கோரிக்கையை நிறைவேற்றிக்கொள்ள வசதியாக அமையும்.

டைஸ் அண்ட் கெமிக்கல் சங்கத்தினர்:-

சாயம், கெமிக்கல் பொருட்களை மாநகரில் கடைக்கு அருகே இருப்பு வைத்துள்ளோம். புறநகர் பகுதியில் தனியாக குடோன்களுடன் தொழிற்பேட்டை அமைத்துக்கொடுத்தால் வசதியாக அமையும்.

கோழிப்பண்ணை உரிமையாளர்கள்:-

கோழிப்பண்ணைகளுக்கு தேவையான மக்காச்சோளம், சோயா பீன்ஸ் தடையின்றி கிடைக்கச்செய்ய வேண்டும். வஞ்சிப்பாளையம் ரெயில் நிலையத்தில் சரக்குகளை இறக்கி செல்ல குட்ஷெட் வசதி செய்து கொடுத்தால் பல்லடம், உடுமலை பகுதியை சேர்ந்த கோழிப்பண்ணையாளர்கள் பயன்பெறுவார்கள்.

அவசரகால கடனளிப்பு உத்தரவாத திட்டம்

சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் காந்திராஜன்:-

பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கான செலவில் 40 சதவீதம் மின்கட்டணத்துக்கு செலவிடப்படுகிறது. எங்களுக்கு காற்றாலை, சூரியமின்சக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கு மானியம் வழங்கி உதவ வேண்டும்.

ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம்:-

பஞ்சு, நூலை ஆன்லைன் வர்த்தகத்தில் இருந்து தடை செய்ய வேண்டும். பின்னலாடை துறையின் மேம்பாட்டுக்கு மத்திய அரசு உதவ வேண்டும். கொரோனா காலத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அவசரகால கடனளிப்பு உத்தரவாத திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கப்பட்டது. அதன்படி தற்போதையை தொழில் முடக்க காலத்தில் பின்னலாடை துறையினருக்கு 50 சதவீத அவசரகால கடனளிப்பு உத்தரவாத திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

பஞ்சு விலை நிலையாக வைக்க நடவடிக்கை

மத்திய இணை மந்திரி எல்.முருகன் பேசியதாவது:-

இந்தியாவின் பொருளாதாரத்தில் திருப்பூர் நகரின் பங்களிப்பு முக்கியமானதாகும். அனைவரின் உழைப்பு, உத்வேகத்தால் உலக அளவில் திருப்பூர் பெருமை பெற்றுள்ளது. பஞ்சு விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய அரசு இறக்குமதிக்கான வரியை இந்த மாதம் இறுதி வரை ரத்து செய்துள்ளது.

ஆன்லைன் வர்த்தகத்தில் சில நிறுவனங்களின் தலையீடுகளால் பஞ்சு விலை உயர்வதாக சொன்னார்கள். பஞ்சு விலையை நிலையாக வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள கவனத்தில் கொள்ளப்படும். மத்திய அரசு தொழில்துறையை ஊக்குவிக்கும் அரசாக விளங்கி வருகிறது. தொழில் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சி என்பதால் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தி வருகிறோம்.

தொழில்துறையின் பங்களிப்பு முக்கியம்

தமிழகத்துக்கு ஒரு ஜவுளிப்பூங்காவை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அரசின் வருவாயில் தொழில்துறையின் பங்களிப்பு முக்கியமாக உள்ளது. 2047-ம் ஆண்டு இந்த நாடு அனைத்து மக்களுக்கும் அனைத்தும் கிடைக்கும் நாடாக விளங்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வருகிற 25 ஆண்டுகள் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானதாகும். எந்த நேரத்திலும் என்னை தொடர்பு கொள்ளலாம். டெல்லிக்கு வரும் தொழில்துறையினருக்கு உதவ நான் தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story