நாமக்கல் மாவட்டத்தில், எம்.பி.யின் கோரிக்கையின்பேரில் தகவல் தொழில்நுட்பவியல் பூங்கா அமைக்க நடவடிக்கை அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி


நாமக்கல் மாவட்டத்தில், எம்.பி.யின் கோரிக்கையின்பேரில்  தகவல் தொழில்நுட்பவியல் பூங்கா   அமைக்க நடவடிக்கை  அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி
x
தினத்தந்தி 21 Sept 2022 12:15 AM IST (Updated: 21 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில், எம்.பி.யின் கோரிக்கையின்பேரில் தகவல் தொழில்நுட்பவியல் பூங்கா அமைக்க நடவடிக்கை அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் ராஜேஷ்குமார் எம்.பி.யின் கோரிக்கையின்பேரில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ்கூறினார்.

அமைச்சர் பேட்டி

நாமக்கல்லில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜிடம் நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி. ஒரு மனு அளித்தார். அதில் நாமக்கல் மாவட்டத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் இங்கு மென்பொருள் தொழிற்பூங்கா அமைக்க ஆவன செய்ய வேண்டும். அதற்கு தேவையான இடம் ராசிபுரம் அருகே நெடுஞ்சாலையில் உள்ளது என கூறியிருந்தார்.

இதையடுத்து அமைச்சர் தங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தகவல் தொழில்நுட்பத்துறை 3 இலக்குகளை கொண்டு செயலாற்றி வருகிறது. முதலாவதாக மக்களுக்கும் அரசிற்கும் இடையே உள்ள இடைவெளியை குறைத்து அரசின் திட்டங்கள் அனைத்தும், எளிதில் இணையவழியில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக இசேவை மையங்கள் மேம்படுத்தப்பட்டு, மென்பொருள் தரம் உயர்த்தப்பட்டு 200-க்கும் மேற்பட்ட அரசுத்துறை சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் 300-க்கும் மேற்பட்ட சேவைகள் இசேவை மையங்கள் மூலம் வழங்கப்பட உள்ளது.

மக்களைத்தேடி அரசு திட்டங்கள்

2-வதாக காகிதம் இல்லா அலுவலகமாக மின் அலுவலகம் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அரசின் கோப்புகளை கையாளுவதில் ஏற்படும் காலதாமதத்தை குறைப்பதுடன் கோப்புகள் பார்க்க வேண்டிய பல்வேறு மட்டத்திலான அலுவலர்களும் உடனடியாகவும், அவர்கள் தேவைப்பட்ட நேரத்திலும் கோப்புகளையும், அதிலுள்ள விவரங்களையும் பார்க்க இத்திட்டம் வழிவகை செய்கின்றது.

3-வது இலக்கு தரவுகள் அடிப்படையிலான அரசு. அதாவது அரசின் பல்வேறு துறைகளில் உள்ள தரவுகளை ஒருங்கிணைத்து, எந்த திட்டத்திற்கு எந்த பயனாளிகள் தகுதியுடையவர்கள் என்பதை சரிபார்த்து வழங்குவதாகும். இத்திட்டம் முழுமையாக செயல்பாட்டிற்கு வரும்போது அரசை தேடி மக்கள் வருகிற நிலைமாறி, மக்களைத்தேடி அரசுத்திட்டங்கள் என்ற சூழல் உருவாகும்.

தகவல் தொழில்நுட்பவியல் பூங்கா

நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரையில் படித்த இளைஞர்கள் அதிகளவில் உள்ளனர். இந்த இளைஞர்களுக்கு திறன்பயிற்சி அளித்து, திறன் படைத்த இளைஞர் தொகுப்பாக மாற்ற முடியும் என்றும், இதற்காக தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க வேண்டும் என்றும் ராஜேஷ்குமார் எம்.பி. கோரிக்கை வைத்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்பவியல் பூங்கா அமைக்கவும், இளைஞர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி வழங்கவும் தகவல் தொழில்நுட்பத்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கொல்லிமலையில் எளிதான இணைய தளம் மற்றும் தொலைபேசி சேவைக்காக ரூ.4 கோடி மதிப்பீட்டில் தொலைபேசி கோபுரம் அமைக்க, ஆதிதிராவிட நலத்துறைக்கு மாவட்ட நிர்வாகம் முன்வழிவு அனுப்பி உள்ளது. இதன்மீது உரிய நடவடிக்கை எடுத்து விரைவில் கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் முழுவதும் வெகு விரைவில் 12,525 கிராமங்கள் பைபர் நெட் மூலம் இணையதள சேவையை பெற முடியும் அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. டிஜிட்டல் சேவை 90 சதவீதம் இந்த ஆண்டுக்குள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வருகிற ஆண்டுகளில் 100 சதவீதம் டிஜிட்டல் சேவை கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story