வெள்ளகோவிலில் ரூ.3 கோடியில் மருத்துவமனை கட்டிடம்


வெள்ளகோவிலில் ரூ.3 கோடியில் மருத்துவமனை கட்டிடம்
x

வெள்ளகோவிலில் ரூ.3 கோடியில் மருத்துவமனை கட்டிடங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்துவைத்தார்.

திருப்பூர்

-

வெள்ளகோவிலில் ரூ.3 கோடியில் மருத்துவமனை கட்டிடங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்துவைத்தார்.

மருத்துவமனை கட்டிங்கள் திறப்பு

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே கரட்டுப்பாளையத்தில் ரூ.2.97 கோடியில் 12 இடங்களில் கட்டப்பட்ட மருத்துவமனை கட்டிடங்கள் திறப்பு விழா, ரூ.57 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. திருப்பூர் கலெக்டர் எஸ்.வினீத் தலைமை தாங்கினார். தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, ஈரோடு அ.கணேசமூர்த்தி எம்.பி. திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல குழு தலைவர் இல.பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் தமிழக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு மருத்துவமனை கட்டிடங்களை திறந்து வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சுகாதாரத் துறையின் துணை இயக்குனர் டாக்டர் ஜெகதீஷ் வரவேற்று பேசினார். பொது சுகாதார துறையின் இயக்குனர் செல்வநாயகம் மருத்துவமனை திட்டங்களை பற்றி விளக்கி கூறினார்.

அமைச்சர் திறந்து வைத்தார்

கரட்டுப்பாளையதில் 12 இடங்களில் ரூ.2 கோடியே 30 லட்சத்தில் கட்டப்பட்ட 9 ஆரம்ப துணை சுகாதார நிலைய கட்டிடம். அமராவதி நகரில் ரூ.37 லட்சத்தில் கட்டப்பட்ட பிரசவவார்டு காத்திருப்பு அறை, மடத்துக்குளம், சாவடிபாளையத்தில் ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்ட இந்திய மருத்துவ மற்றும் ஹோமியோபதி துறை சார்பில் சித்தா பிரிவு கட்டிடங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் பொதுமக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். திருப்பூர் மாவட்டத்தில் மருத்துவ பணிகள் கூடுதல் கட்டமைப்பு மேம்படுத்துவதற்காக 12 புதிய கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது, அமைச்சர் மு.பெ.சாமிநாதன், அமைச்சர் கயல்விழி ஆகியோரின் கோரிக்கையை ஏற்று காங்கயம் மருத்துவமனை மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்த ஒப்புதல் அளித்தார். முதல் கட்டமாக ரூ.12 கோடிக்கு திட்டப்பணிகள் நடைபெற உள்ளது.

தாராபுரத்தில் இருக்கும் அரசு மருத்துவமனையையும் தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று ரூ.24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த வகையில் இரு மருத்துவமனையின் கட்டமைப்பு பணிகளும் வருகின்ற 15-ந் தேதி தொடங்கப்பட உள்ளது. அவை மிக விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் 36 மருத்துவமனை புதிதாக அமைய இருக்கிறது. கடந்த 8 ஆண்டுகளாக தமிழகத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் வரவில்லை, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மந்திரியிடம் வைத்த கோரிக்கையை ஏற்று 25 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 25 நகர்ப்புற சுகாதார நிலையங்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது,

அந்த வகையில் 50 சுகாதார நிலையங்கள், 2 சுகாதார நிலையங்கள் திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது, படியூரில் ஒரு சுகாதார நிலையமும் கொளத்துப்பாளையத்தில் ஒரு நகர்ப்புற சுகாதார நிலையமும் அமைய உள்ளது.

அவினாசி அரசு மருத்துவமனையில் ரூ.6 கோடியில் தாய்-சேய் நலப்பிரிவு கட்டிடம் அமைக்கப்படும், பெருமாநல்லூர், வெள்ளகோவில், கணியூர், செம்மிபாளையம், குடிமங்கலம், பொன்னாபுரம் ஆகிய பகுதிகளில் ரூ.4.85 கோடியில் புதிய வட்டார பொது சுகாதார கட்டிடங்கள் அமைக்கப்படும். ரூ.4.55 கோடியில் 14 சுகாதார நிலையங்களும் புதிய கட்டிடங்களும் அமைக்கப்படும், குடிமங்கலம், கணியூர் ஆகிய பகுதிகளில் ரூ.1.66 கோடியில் புதிய சுகாதார நிலைய கட்டிடங்கள் அமைக்கப்படும், ரூ.13 லட்சத்தில் உடுமலை மேட்டுப்பாளையம், நல்லூர், எல்.ஆர்.ஜி.ஆர், மேட்டுப்பாளையம் ஆகிய நகர்புற சுகாதார நிலையங்களில் ரூ.13 லட்சத்தில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் அமைக்கப்படும், ரூ.1.20 கோடியில் வேலம்பாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய கட்டிடம் அமைக்கப்படும், ரூ.10.24 கோடியில் ஒருங்கிணைந்த அவசிய ஆய்வக சேவைகள் வழங்கப்படும். ரூ 1.16 கோடியில் கிராம துணை சுகாதார நிலையங்கள் நல்வாழ்வு மையங்களாக மாற்றப்படும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

விழாவில் 126 பேருக்கு ரூ.57 லட்சத்து 57 ஆயிரத்து-144 க்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் வெள்ளகோவில் நகர்மன்ற தலைவி மு.கனியரசி, திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. துணைச்செயலாளர் கே.ஆர்.முத்துகுமார், வெள்ளகோவில் ஒன்றிய செயலாளர் மோளகவுண்டன்வலசு கே.சந்திரசேகரன், நகர செயலாளர் சபரி.எஸ்.முருகானந்தன். வெள்ளகோவில் வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி, காங்கயம் தாசில்தார் புவனேஸ்வரி உள்படபலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story