பெண்கள் சுய உதவி குழுக்களுக்கு ரூ.25 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு; ஈரோட்டில் அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி


பெண்கள் சுய உதவி குழுக்களுக்கு  ரூ.25 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு; ஈரோட்டில் அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி
x

பெண்கள் சுய உதவி குழுக்களுக்கு நடப்பாண்டு ரூ.25 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக ஈரோட்டில் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு


பெண்கள் சுய உதவி குழுக்களுக்கு நடப்பாண்டு ரூ.25 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக ஈரோட்டில் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

ரூ.25 ஆயிரம் கோடி

ஈரோடு மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரிய கருப்பன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

கடந்த ஆண்டு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இலக்கை தாண்டி ரூ.21 ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டது. நடப்பாண்டு ரூ.25 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் இதுவரை ரூ.12 ஆயிரம் கோடி வழங்கப்பட்டு உள்ளது.

சமத்துவபுரம்

கடந்த முறை துணை முதல்-அமைச்சராக இருந்தபோது, உள்ளாட்சி மற்றும் ஊராட்சி துறைகளை கவனித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுய உதவி குழுக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். இடையில் சுணக்கம் ஏற்பட்டது. மீண்டும் சுய உதவி குழுக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் கண்காட்சி கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. அதேபோன்று மாவட்ட மற்றும் மாநில அளவிலும் கண்காட்சிகள் நடத்தப்படும்.

தமிழகத்தில் கருணாநிதி ஆட்சியில் 238 பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் உருவாக்கப்பட்டன. கடந்த ஆட்சியில் அவைகள் சரியாக பராமரிக்கப்படவில்லை. இதனால் முதல் கட்டமாக கடந்த ஆண்டு 145 சமத்துவபுரங்கள் ரூ.190 கோடி மதிப்பீட்டில் பராமரிக்க நிதி ஒதுக்கப்பட்டது. மீதமுள்ள சமத்துவபுரங்கள் பராமரிக்கவும் விரைவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

பணியாளர் பற்றாக்குறை

100 நாள் வேலை திட்டத்தில் பணி நாட்களின் எண்ணிக்கை மற்றும் கூலி உயர்த்தப்படும் என்ற தேர்தல் அறிவிப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவார். கடந்த ஆட்சியில் உள்ளாட்சி தேர்தலை முறையாக நடத்தாததால் நிதி வருவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய உள்ளாட்சிக்கான நிதிகள் வந்து கொண்டிருக்கின்றன. வேளாண் துறையும், உள்ளாட்சித்துறையும் ஒருங்கிணைந்து கிராமப்புறங்களில் செயல்படுகின்றன.

சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி போன்றவை மேம்படுத்த அரசு நிதி ஒதுக்குகிறது. மற்ற துறைகளை போல் இல்லாமல் மக்கள் பிரதிநிதிகள் அதிகம் உள்ள இந்தத்துறையில் அவர்களின் கருத்தறிந்து அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆட்சியில் முறையாக பணியாளர்கள் அமர்த்தப்படாததால் பல்வேறு துறைகளில் பணியாளர்கள் பிரச்சினை உள்ளது. தற்போது தமிழக அரசு படிப்படியாக பணியாளர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story