15 வண்ணங்களில் சேலைகள் தயாரிப்பு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்குவதற்காக 15 புதிய வண்ணங்களில் சேலைகள் தயாரிக்கப்படுவதாக கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி கூறினார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்குவதற்காக 15 புதிய வண்ணங்களில் சேலைகள் தயாரிக்கப்படுவதாக கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி கூறினார்.
ஆய்வுக்கூட்டம்
கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் விசைத்தறி வேட்டி சேலை உற்பத்தி மற்றும் கொள்முதல் முன்னேற்றம் குறித்து கோவை, திருப்பூர், ஈரோடு, திருச்செங்கோடு ஆகிய சரகங்களுக்கான ஆய்வுக்கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமை தாங்கினார். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி உடனிருந்தார்.
கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்துறை அரசு முதன்மை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், கைத்தறி துணை ஆணையாளர் ராஜேஷ், துணிநூல் துறை ஆணையாளர் வள்ளலார், கலெக்டர் வினீத், மேயர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நடப்பு ஆண்டு திட்டத்தின் கீழ் இதுவரை விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்பட்ட வேட்டி-சேலைகள் மற்றும் கொள்முதல் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
1¾ கோடி வேட்டி- சேலைகள் உற்பத்தி
கூட்டத்தில் அமைச்சர் ஆர்.காந்தி பேசியதாவது:-
பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்குவதற்காக கொள்முதல் செய்யப்பட்டு கிடங்கில் உள்ள வேட்டி-சேலைகளை வருவாய் மாவட்டம் வாரியாக தேவை அடிப்படையில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அனுப்புவது குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேட்டி-சேலை வழங்கும் திட்டத்துக்கு தேவையான 1 கோடியே 77 லட்சம் வேட்டிகள், 1 கோடியே 77 லட்சம் சேலைகளில் இதுவரை 50 சதவீதம் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீதம் உள்ள உற்பத்தியை அடுத்த மாதம் 10-ந்தேதிக்குள் நிறைவு செய்வதற்கு உரிய அனைத்து நடவடிக்கைகளும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இலவச வேட்டி-சேலைகளில் நடப்பு ஆண்டில் மாறுதல் செய்யப்படுகிறது. அதன்படி சேலைகளில் 15 புதிய வண்ணங்களிலும், வேட்டியில் கரை 1 அங்குலம் அகலத்திலும் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த திட்டத்தில் 1 லட்சம் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள் தொடர்ந்து 6 மாத காலத்துக்கு வேலைவாய்ப்பு பெறுகிறார்கள். இந்த திட்டத்தின் மூலமாக உப தொழிலில் 50 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
முத்ரா கடன் திட்டம்
நிகழ்ச்சியில் திருப்பூர் சரகத்தில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க நெசவாளர்களுக்கு முத்ரா கடன் திட்டத்தின் கீழ் ரூ.5½ லட்சம் கடன் உதவியும், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிந்து 60 வயது பூர்த்தியடைந்த கைத்தறி நெசவாளர்களுக்கு முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணையும் அமைச்சர்கள் வழங்கினார்கள்.
கூட்டத்தில் துணை மேயர் பாலசுப்பிரமணியம், மண்டல தலைவர் இல.பத்மநாபன், கைத்தறி கூடுதல் இயக்குனர் கர்ணன், துணை இயக்குனர்கள், உதவி அமலாக்க அலுவலர்கள், பஞ்சாலை கழக மேலாண்மை இயக்குனர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.