இயற்கை விவசாயத்தை மேம்படுத்த வேண்டும்
தாராபுரத்தில் தோட்டக் கலை சார்பில் மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி கருத்தரங்கில் இயற்கை விவசாயத்தை மேம்படுத்த வேண்டும் என ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வேண்டுகோள் விடுத்தார்.
தாராபுரத்தில் தோட்டக் கலை சார்பில் மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி கருத்தரங்கில் இயற்கை விவசாயத்தை மேம்படுத்த வேண்டும் என ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வேண்டுகோள் விடுத்தார்.
கருத்தரங்கு
திருப்பூர் மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை சார்பில் மாவட்ட அளவில் விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் தாராபுரம் உடுமலை ரோட்டில் உள்ள வேலவர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் தலைமை தாங்கினார். தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் சுரேஷ்ராஜ் வரவேற்றார். கருத்தரங்ைக குத்து விளக்கு ஏற்றி தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தொடங்கி வைத்து பேசியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளின் நலன்களை பேணிக்காக்க விவசாயத்தில் பல்வேறு திட்டங்களை வகுத்து அமல்படுத்தி வருகிறார். கடந்த 20ஆண்டுகளுக்கு முன்பு பெரும்பாலும் செடி, கொடிகள் மற்றும் புண்ணாக்கு போன்றவற்றை பயன்படுத்தி விவசாயம் நடந்தது. தற்போது ரசாயன உரங்களை கொண்டு விவசாயம் செய்து வருவதால் மக்கள் பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். அதனால் விவசாயிகள் முடிந்தவரை இயற்கை விவசாயத்தை பேணி காக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
கருத்தரங்கில் பொங்கலூர் வேளாண் அறிவியல் நிலைய தலைமை பேராசிரியர் டாக்டர் இளையராஜா, இணை பேராசிரியர் டாக்டர் சித்ரா ஆகியோர் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.
இதில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ். வி.செந்தில் குமார், தி.மு.க. நகர செயலாளர் எஸ்.முருகானந்தம், தலைமை கழக செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.தனசேகர் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.தோட்டக்கலை உதவி இயக்குனர் திவ்யா நன்றி கூறினார்.