மாநில வளர்ச்சியை இலக்காக கொண்டு தி.மு.க. அரசு செயல்படுகிறதுதிருச்செங்கோட்டில் அமைச்சர் எ.வ.வேலு பேட்டி
திருச்செங்கோடு:
தமிழகத்தின் மாநில வளர்ச்சியை இலக்காக கொண்டு தி.மு.க. அரசு செயல்பட்டு வருவதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
கவர்னரை மதிக்கின்றது
திருச்செங்கோடு அருகே சிறுமொளசியில் நேற்று நடந்த மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-
தமிழக அரசு கவர்னரை மதிக்கின்றது. மத்திய, மாநில அரசுகளுக்கு கவர்னர்கள் பாலமாக இருந்து பாடுபட்டு உள்ளார்கள். அரசுக்கு உந்து சக்தியாக இருந்து கவர்னர்கள் பணியாற்றி வருகிறார்கள். ஆனால் சிலர் இதில் இருந்து மாறுபட்டு செயல்படுகின்றனர். இவற்றையெல்லாம் பெரிதுபடுத்தாமல் மாநில நன்மையை மட்டுமே கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
முடக்க முடியாது
தமிழக அரசை வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு முடக்கப்படும் என்ற வதந்தியை ஒரு சிலர் பரப்பி வருகின்றனர். தொழில் வளர்ச்சி, அந்நிய முதலீடு ஈர்ப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் முதன்மை மாநிலமாக தமிழகம் உள்ளது. எனவே இங்கே இந்த ஆட்சியை யாரும் முடக்கவோ, கலைக்கவோ முடியாது. மத்திய அரசு மற்றும் மத்திய மந்திரிகளுக்கு கடிதங்களை எழுதி மாநில வளர்ச்சியை இலக்காக கொண்டு தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது.
நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு பகுதிகளில் சுற்றுவட்ட, புறவழிச்சாலை முன்னுரிமை அளிக்கப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளது. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நிலங்கள் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டு சாலைகள் போட முடியாமல் இருந்தது. ஆனால் தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் அந்த பணிகளை விரைந்து செயல்படுத்தி சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன.
சாலை வசதி
இதற்காக சிறப்பு அலுவலர்களை மண்டல வாரியாக நியமித்து நிலம் கையகப்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு ஏற்ப அரசு உடனுக்குடன் சாலை வசதிகளை செய்து தருகிறது. ஒப்பந்த காலத்திற்குள் அரசு சட்டக்கல்லூரியில் கட்டுமான பணியை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.