ரசாயன பொருட்களை பயன்படுத்தி மீன்களை பதப்படுத்தினால் கடும் நடவடிக்கை- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
ரசாயன பொருட்களை பயன்படுத்தி மீன்களை பதப்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரசாயன பொருட்களை பயன்படுத்தி மீன்களை பதப்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமைச்சர் ஆய்வு
தஞ்சை கரந்தையில் உள்ள நீர்வாழ் உயிரின ஆய்வுக்கூடமான மீன்குஞ்சு உற்பத்தி நிலையத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
பின்னர் தஞ்சை மாவட்டம் ஈச்சங்கோட்டையில் உள்ள அயலின கால்நடை பெருக்குபண்ணையில் உறைவிந்து உற்பத்தி நிலையம் மற்றும் உயிரின கால்நடை பெருக்கு பண்ணையையும், தஞ்சை மாவட்டம் கீழத்தோட்டம் கிராமத்தில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் மீன்இறங்க ுதளம் அமைக்கப்பட்டு வருவதையும், ரூ.10 கோடி மதிப்பீட்டில் சேதுபாவாசத்திரத்தில் மீன் இறங்குதளம் அமைக்கப்பட்டு வருதையும், மல்லிப்பட்டினத்தில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் பயன்பாட்டில் உள்ள மறுசீரமைப்பு துறைமுகத்தையும் அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பேட்டி
முன்னதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் ஆறு, ஏரி, குளங்களில் மீன் உற்பத்தியை அதிகப்படுத்தவும், மீன்வளத்துறை சார்பில் மீன்குஞ்சு உற்பத்தியை அதிகரித்து சத்தான உணவுகளை பொதுமக்களுக்கு வழங்கவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
75 சதவீத மீன்குஞ்சுகள் உற்பத்தி
அதன்படி அனைத்து பண்ணைகளிலும் மீன்குஞ்சுகள் உற்பத்தியை அதிகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் அதிக அளவில் மீன்குஞ்சுகள் வாங்கப்பட்டன. தற்போது 75 சதவீதம் அளவுக்கு மீன்குஞ்சுகள் தமிழகத்தில் உற்பத்தி செய்து வருகிறோம். தனியார் மூலம் மீன்கள், கடல் மீன்கள் ரூ.6,500 கோடி அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
மீன்பிடி தடைகாலத்தில் மீனவர்கள் குடும்பத்துக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இதனை அதிகப்படுத்தி வழங்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து முதல்-அமைச்சர் கவனத்துக்கு எடுத்துச்சென்று பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
கடும் நடவடிக்கை
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் தூண்டில் வளைவு அமைப்பது குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ரசாயன பொருட்களை பயன்படுத்தி மீன்களை பதப்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
நுண்மீன்குஞ்சு உற்பத்தி மற்றும் மீன்குஞ்சு வளர்ப்பு ஆகியவற்றில் டெல்டா மாவட்டங்களில் முதன்மையான மாவட்டமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. கடந்த ஆண்டு இந்தியாவிலேயே சிறந்த உள்நாட்டு மீன்வளர்ப்பு மாவட்டமாக தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டு 3 லட்சம் ரொக்கப்பரிசு, சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டுள்ளது.
2022-23-ம் ஆண்டில் உள்நாட்டு மீன் உற்பத்தி 33 ஆயிரத்து 727 டன்கள் ஆகும். கடல்மீன்கள் உற்பத்தி 38 ஆயிரத்து 566 டன்கள் ஆகும். இறால் உற்பத்தி 12 ஆயிரத்து 429 டன்கள் ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது கலெக்டர் தீபக் ஜேக்கப், எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், அண்ணாதுரை, அசோக்குமார், மேயர் சண்.ராமநாதன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு தலைவர் முத்துமாணிக்கம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.