ஆதிதிராவிடர் உண்டு உறைவிடப்பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு

காரையாறு காணிக்குடியிருப்பு ஆதிதிராவிடர் உண்டு உறைவிடப்பள்ளியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று ஆய்வு செய்தார்.
விக்கிரமசிங்கபுரம்:
காரையாறு காணிக்குடியிருப்பு ஆதிதிராவிடர் உண்டு உறைவிடப்பள்ளியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று ஆய்வு செய்தார்.
அமைச்சர் ஆய்வு
மேற்கு தொடர்ச்சி மலை பாபநாசம் வனப்பகுதியில் உள்ள சேர்வலாறு, அகஸ்தியர் காணி குடியிருப்பு, சின்ன மயிலாறு, பெரிய மயிலாறு, இஞ்சிக்குழி உள்ளிட்ட பகுதிகளில் காணி இன மக்கள் வசித்து வருகின்றனர். காணி மக்கள் படிப்பதற்காக காரையாறு மேலணை மற்றும் சேர்வலாறு பகுதிகளில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளும், அகஸ்தியர் காணி குடியிருப்பில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் செயல்படும் உண்டு உறைவிட உயர் நிலைப்பள்ளியும் உள்ளன.
மாணவர்களுடன் கலந்துரையாடல்
அகஸ்தியர் காணிக்குடியிருப்பில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளியில் நேற்று தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார். பின்னர் அவர் பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து கலந்துரையாடினார். மேலும் பள்ளி வளாகத்தில் புதிதாக தொடங்கப்படவுள்ள கட்டிடப்பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து சின்னமயிலாறு காணிக்குடியிருப்பிற்கு சென்ற அமைச்சர், அங்கு செயல்படும் இல்லம் தேடி கல்வி மையத்தைப் பார்வையிட்டு தேவைகள் குறித்துக் கேட்டறிந்தார். அங்கு மலைவாழ் மக்களான காணி மக்கள் அமைச்சருக்கு பாரம்பரிய உணவான கப்ப கிழங்கு, தேன் மற்றும் துளசி நீர் வழங்கினர். தொடர்ந்து அங்குள்ள இயற்கை மருத்துவ முறையையும் பார்வையிட்டார்.
அப்போது அமைச்சரிடம் காணி மக்கள் சின்ன மயிலாறு பகுதியில் சத்துணவு மையமும், தொடக்கப் பள்ளியும் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அருவியை பார்வையிட்டார்
தொடர்ந்து சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு சென்றார். பின்னர் பாபநாசம் காரையாறு அணையின் அக்கரையில் உள்ள பானதீர்த்தம் அருவியை படகில் சென்று பார்வையிட்டார்.
ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் விஷ்ணு, நெல்லை மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி, தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி திருப்பதி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தனித்தாசில்தார் ராஜேஷ்வரன், இல்லம் தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், அம்பை யூனியன் தலைவர் பரணி சேகர், அம்பை நகராட்சி தலைவர் பிரபாகரன், விக்கிரமசிங்கபுரம் நகர செயலாளர் கணேசன், சிவந்திபுரம் ஊராட்சி தலைவர் ஜெகன், மாவட்ட கவுன்சிலர் அருண் தவசு பாண்டியன் உள்பட பலர் உடனிருந்தனர்.