234 தொகுதிகளிலும் உள்ள பள்ளிகளை ஆய்வு செய்யும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் உள்ள பள்ளிகள், கல்வி அலுவலகங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்ய இருக்கிறார்.
சென்னை,
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்ததும் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பருவமழை தொடங்க உள்ள நிலையில் பள்ளிகளில் இடியும் நிலையில் உள்ள கட்டிடங்களை இடித்து அகற்ற உத்தரவிட்டிருக்கிறோம். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதிக்குட்பட்ட லேடி விலிங்டன் பள்ளியில் கூட சில கட்டிடங்கள் சேதமான நிலையில் இருந்தன. அதை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வும் சென்று பார்த்தார். அதை உடனடியாக இடித்து அகற்ற கூறி இருக்கிறோம். இது அந்த பள்ளிக்கான உத்தரவு மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பொருந்தும்.
மழைக்காலத்தில் பள்ளிகளில் இருக்கும் ஆவணங்களை பாதுகாப்பாக வைக்கும் வகையில், நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளோம். பள்ளி வளாகத்தில் தேங்கும் மழைநீரை அகற்றுவதற்கும் ஏற்ற அறிவுரைகளை வழங்கியிருக்கிறோம்.
234 தொகுதிகளில் ஆய்வு
அங்கன்வாடிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை நடத்த இருக்கும் சிறப்பு ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள ரூ.5 ஆயிரம் பிழைப்பூதியத்தை உயர்த்துவது என்பது முதல்-அமைச்சரின் முடிவு. இதுதொடர்பாக நிதித்துறை அமைச்சருடன் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் எங்களுடைய கருத்துகளையும் தெரிவித்து இருக்கிறோம்.
234 தொகுதிகளிலும் கல்வித்துறை சார்ந்த பள்ளிகள், கல்வி அலுவலகங்கள், தனியார் பள்ளிகளின் 77 வகையான உள்கட்டமைப்பு, கல்வித்துறையின் திட்டப்பணிகள் சரியாக செயல்படுத்தப்படுகிறதா? என்பது தொடர்பாக நான் ஆய்வு செய்ய இருக்கிறேன். துறை சார்ந்த அமைச்சர் இதுபோன்ற ஆய்வு செய்யும்போது, அதிகாரிகளும் அதனைத்தொடர்ந்து ஆய்வை மேற்கொள்வதற்கு ஒரு உத்வேகமாக இருக்கும் என்ற அடிப்படையில், இதை மேற்கொள்கிறேன். தமிழகம் முழுவதும் உள்ள 58 ஆயிரம் பள்ளிகளிலும் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் எனது ஆசை. மேலும் இந்த ஆய்வு பள்ளிக்கல்வித்துறைக்கு தேவையான வசதிகளை பூர்த்தி செய்ய மேலும் நிதியை ஒதுக்குவதற்கு ஒரு அடித்தளமாகவும் அமையும்.
சித்தாந்தம்
கோவையில் ஒரு பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி வழங்கியதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது. இதுகுறித்து விசாரித்த போது அந்த பள்ளி பயிற்சிக்காக அனுமதி வழங்கவில்லை என்ற தகவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிக்கூடத்தை சுத்தம் செய்வதற்காக தான் அனுமதி கேட்டதாகவும், ஆனால் சுத்தம் செய்துவிட்டு புறப்படும்போது உறுதிமொழி எடுத்துவிட்டு சென்றதாகவும், இனி இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காது என அந்த மாநகர கமிஷனர் தெரிவித்துள்ளார்.
எந்தவித சித்தாந்தங்களும் பள்ளிகளில் நுழைந்துவிடக்கூடாது என்பது நடைமுறையில் உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.