தமிழை காக்க முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அரணாக இருப்போம் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு


தமிழை காக்க முதல்- அமைச்சர்  மு.க.ஸ்டாலினுக்கு அரணாக இருப்போம்  அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
x

தமிழ் மொழியை காக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அரணாக இருப்போம் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

சேலம்

சேலம்,

பொதுக்கூட்டம்

சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் இந்தி எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நேற்று சேலம் கோட்டை மைதானத்தில் நடந்தது. சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் ரகுபதி வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர்கள் டி.எம்.செல்வகணபதி (மேற்கு), எஸ்.ஆர்.சிவலிங்கம் (கிழக்கு), பார்த்திபன் எம்.பி, மேயர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தி மொழி திணிப்பதை தொடர்ந்து எதிர்த்து கொண்டே இருக்கிறோம். இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 1952-ம் ஆண்டு மத்திய அரசு அலுவலகங்களில் இருந்த இந்தி எழுத்துக்கள் மீது மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி திருச்சியில் தார் பூசிய வரலாறு உண்டு. தமிழ் மொழிக்காக 10 எம்.எல்.ஏ.க்கள் பதவியை துறந்ததும் தி.மு.க.வின் வரலாறு. இந்தி மொழி 500 ஆண்டுகாலம் தான் ஆகிறது.

அரணாக இருப்போம்

4 ஆயிரம் ஆண்டு தமிழ் மொழியை அழிக்க நினைப்பது எந்த விதத்தில் நியாயம். 4 ஆயிரம் ஆண்டு பழமையான தமிழ்மொழியை ஆட்சி மொழியாக்க ஏன்? மறுக்கிறார்கள். எங்கள் மொழி ஆட்சி மொழியாக இருக்க வேண்டும். தமிழுக்கு இணையான மொழி இந்தி அல்ல.

இந்தியாவுக்கு வழிகாட்டி தமிழ் மொழி தான். தமிழகத்தில் உள்ள 8 கோடி மக்களின் உருவம் தான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். திராவிட இயக்கம் தான் ஆன்மீக இயக்கத்தை காப்பாற்ற போகுது.எனவே தமிழ் மொழியை காக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அரணாக இருப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் அவைத்தலைவர் சுபாசு, பொருளாளர் கார்த்திகேயன், மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.அண்ணாமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story