தி.மு.க. ஆட்சியில் தென்காசி மாவட்டத்துக்கு தேவையான அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும்-அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேச்சு
தி.மு.க. ஆட்சியில் தென்காசி மாவட்டத்துக்கு தேவையான அனைத்து திட்டங்களும் நிறைவேற்றி தரப்படும் என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்
தி.மு.க. ஆட்சியில் தென்காசி மாவட்டத்துக்கு தேவையான அனைத்து திட்டங்களும் நிறைவேற்றி தரப்படும் என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.
நினைவுப்பரிசு
தென்காசியில் நேற்று நடந்த நலத்திட்ட உதவிகள் விழாவில் கலந்து ெகாண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், கலெக்டர் ஆகாஷ் ஆகியோர் திருவள்ளுவர் சிலையை நினைவுப்பரிசாக வழங்கினார்கள். விழாவில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியதாவது:-
தென்காசி மாவட்டம் நெல்லையில் இருந்து பிரிந்து இரண்டு ஆண்டுகள் தான் ஆகிறது. தென்காசி மாவட்டத்துக்கு பல அலுவலகங்கள் வரவில்லை என்பது தெரியும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்தையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார். தென்காசி மாவட்டத்துக்கு தேவையான அனைத்து திட்டங்களும் தி.மு.க. ஆட்சி காலத்தில் நிறைவேற்றி தரப்படும். தென்காசி வளமையான மாவட்டமாக மாற்றப்படும். இதற்கு உரிய அனைத்து நடவடிக்கைகளையும் முதல்-அமைச்சர் எடுத்து வருகிறார். நாங்களும் அவரிடம் இந்த மாவட்டத்தின் தேவைகளை எடுத்துக்கூறி நிறைவேற்றி தருவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
வேளாண் கல்லூரி
தனுஷ்குமார் எம்.பி. பேசுகையில், 'தென்காசி மாவட்டம் விவசாய நிலங்கள் அதிகம் நிறைந்த மாவட்டம் ஆகும். எனவே சங்கரன்கோவிலில் தொழில் வளர்ச்சி ஏற்படுத்தித்தர வேண்டும். அரசு வேளாண்மை கல்லூரி அமைத்து தர வேண்டும்' என்றார்.
ராஜா எம்.எல்.ஏ. பேசும்போது, 'திராவிட மாடல் ஆட்சி சிறப்பான முறையில் நடந்து வருகிறது. இதற்கு மக்களும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். சங்கரன்கோவில் தொகுதியில் நெசவாளர்கள் அதிகம் உள்ளனர். அந்த நெசவாளர்கள் செய்கின்ற கைத்தறிக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும்' என்றார்.
நதிகள் இணைப்பு திட்டம்
பழனிநாடார் எம்.எல்.ஏ. பேசும்போது, 'தென்காசி மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையான ராமநதி-ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்டத்தை நிறைவேற்றி தர வேண்டும். வீரகேரளம்புதூரில் இருந்து ஊத்துமலைக்கு புதிய கால்வாய் அமைத்து தர வேண்டும். செண்பக கால்வாய் ஓடையை சீரமைத்து தர வேண்டும்' என்றார்.
டாக்டர் சதன்திருமலைக்குமார் எம்.எல்.ஏ. பேசுகையில், 'முதல்-அமைச்சர் அண்டை மாநிலமான கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி பம்பை-அச்சன்கோவில்-வைப்பாறு நதிகளை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்தி தந்தால் இந்த பகுதியில் உள்ள 2½ லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். குடிநீர் தேவை பூர்த்தியாகும். மேலும் செண்பகவல்லி அணைக்கட்டு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். தென்காசி மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக்கல்லூரி அமைத்து தர வேண்டும். மூலிகைகள் அதிகம் நிறைந்த சிவகிரி பகுதியில் அரசு சித்த மருத்துவக்கல்லூரி அமைத்து தர வேண்டும். வாசுதேவநல்லூர் தொகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைத்து தர வேண்டும். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கால்நடை மேய்ச்சல் நிலம் அமைத்து தர வேண்டும். தேவேந்திரகுல வேளாளர்களின் நீண்டநாள் கோரிக்கையான சுதந்திர போராட்ட வீரர் வெண்ணி காலாடிக்கு மணிமண்டபமும், சிலையும் அமைத்து தந்து அரசு விழா நடத்த வேண்டும்' என்றார்.