ஆஷா ஊழியர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக அமைச்சர் ஒப்புதல் - சி.ஐ.டி.யூ. பொதுச்செயலாளர் தகவல்
ஆஷா ஊழியர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளதாக சி.ஐ.டி.யூ. பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகம் முழுவதும் ஆஷா ஊழியர்கள், கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் சரியான நேரத்தில் தடுப்பூசி செலுத்தி அவர்களின் நலனில் அக்கறை கொண்டு செயல்படுகின்றனர். குறிப்பாக பஸ் போக்குவரத்தே இல்லாத மலைவாழ் மக்கள் வாழும் குக்கிராமங்களில் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், குழந்தைகள் என அனைவருக்கும் தடுப்பூசி மற்றும் அரசு அவ்வப்போது செயல்படுத்தும் திட்டங்களை அவர்களிடத்தில் கொண்டு செல்லும் பணியை திறம்பட செய்து கொண்டு இருக்கும் ஆஷா ஊழியர்களின் வாழ்க்கை நிலையோ மிகவும் கவலைக்குரியதாக உள்ளது.
தமிழ்நாடு அரசு இவர்களது நிலையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.26,000 வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரி பெரும் திரள் ஆர்ப்பாட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. சங்கத்தின் மாநில தலைவர் டி.டெய்சி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யூ. மாநில தலைவர் அ.சவுந்தரராசன், பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் மற்றும் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் உரையாற்றினர்.
இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சரையும், அரசு முதன்மைச் செயலாளரையும் சந்தித்து ஆஷா ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தப்பட்டது. கோரிக்கைகளை பரிசீலித்து உடனடியாக நிறைவேற்றுவதாக உறுதி அளித்துள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.