'மாணவர்களின் உயிரிழப்பு குறித்து மத்திய அரசு கவலைப்படவில்லை' அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு


மாணவர்களின் உயிரிழப்பு குறித்து மத்திய அரசு கவலைப்படவில்லை அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு
x

நீட் தேர்வால் நிகழ்ந்து வரும் மாணவர்களின் உயிரிழப்பு குறித்து மத்திய அரசு கவலைப்படவில்லை என அமைச்சர் துரைமுருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை,

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க. சார்பில் நேற்று நடைபெற்ற உண்ணாவிரதத்தை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

நீட் தேர்வால் மருத்துவராக முடியாமல் மாணவர்கள் பலர் தங்களது இன்னுயிரை மாய்த்து கொண்டுள்ளனர். நீட் தேர்வை எதிர்த்து நீதிக்காக ஒரு போராட்டம் நடைபெற்று வருகிறது. அதிலே ஒரு அறப்போராட்டம்தான் இந்த உண்ணாவிரத போராட்டம். இந்த நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க. நீண்ட நாட்களாக போராடி வருகிறது. இதற்கு முன்பு தி.மு.க.வில் பலர் இந்தி திணிப்பை எதிர்த்து உயிர் விட்டனர். பல மாணவர்களும் இந்தி திணிப்பை எதிர்த்து உயிர் இழந்துள்ளனர்.

அந்த வழியில் இன்று நீட் தேர்வை எதிர்த்து மாணவர்களாகிய இளம் சிட்டுகள் பலர் தங்கள் உயிரை மாய்த்து உள்ளனர். ஆனால் அதைப் பற்றி மத்தியில் உள்ள ஆட்சியாளர்களும், அரசும் கவலைப்படவில்லை.

ஆட்சியை ஒழித்துவிடும்

இந்தி திணிப்பின் போது உயிர் விட்டவர்களின் சாபத்தால் அதை திணித்தவர்களின் ஆட்சி ஒழிந்தது. அதைப்போல் நீட் தேர்வை எதிர்த்து பலர் விடுகிற சாபம் இந்த ஆட்சியை (மத்திய பா.ஜ.க. ஆட்சி) ஒழித்துவிடும். நீட் தேர்வை ரத்து செய்ய அரசியல்வாதிகள் மட்டுமல்ல கல்வியாளர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த அறப்போராட்டத்தை பொறுத்தவரை ஏதோ ஒருநாள் உண்ணாவிரதம் இருந்தோம் என்று இல்லாமல் பல தொடர் போராட்டங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பார்.

நீட் தேர்வு ஒழிந்தது, அதற்கு காரணம் உதயநிதி தான் என சரித்திரத்தில் ஒருநாள் இடம் பெறும். கருணாநிதியின் வேகம், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் திட்டமிட்டு பணியாற்றுகிற அனுபவம் அமைச்சர் உதயாநிதியிடம் இருக்கிறது. நீட் தேர்வை பொறுத்தவரை அவரால் தான் முற்றுப்புள்ளி வைக்க முடியும் என நினைக்கிறேன். எனவே அவரது போராட்டம் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story