நெல்லையில் நீர்வளத்துறை ஆய்வு கூட்டம்: 10 மாவட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை-கிடப்பில் போடப்பட்ட பணிகளை விரைவுபடுத்த உத்தரவு
நெல்லையில் நடந்த நீர்வளத்துறை ஆய்வு கூட்டத்தில் 10 மாவட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர், கிடப்பில் போடப்பட்ட பணிகளை விரைவுபடுத்த உத்தரவிட்டார்
நெல்லையில் நடந்த நீர்வளத்துறை ஆய்வு கூட்டத்தில் 10 மாவட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர், கிடப்பில் போடப்பட்ட பணிகளை விரைவுபடுத்த உத்தரவிட்டார்.
அமைச்சர் துரைமுருகன் ஆய்வு
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் ஆகிய 10 மாவட்டங்களை உள்ளடக்கிய மதுரை மண்டல நீர்வளத்துறை ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்கினார். நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு, மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி மற்றும் 10 மாவட்டங்களை சேர்ந்த நீர்வளத்துறை உயர் அதிகாரிகள், நீர்வளத்துறை தொடர்பான பணிகள் நடைபெறும் பிற துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தென் மாவட்டங்களில் நடைபெற்று வரும் நீர்வளத்துறை தொடர்பான பணிகளின் தற்போதைய நிலை, கிடப்பில் போடப்பட்டுள்ள பணிகளின் தற்போதைய நிலை மற்றும் கிடப்பில் போடப்பட்டதற்கான காரணம்? அதற்கான தீர்வு குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் துரைமுருகன் கேட்டறிந்தார்.
மேலும் வறட்சி மிகுந்த பகுதிகளை வளமாக்கும் வகையில் புதிய திட்டங்களை தயார் செய்து அதற்கான கருத்துருக்களை உடனடியாக சமர்ப்பிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பிற துறைகளால் செய்யப்படும் காலதாமதத்தால் கிடப்பில் போடப்பட்ட பணிகளையும் உடனடியாக மேற்கொள்ள உத்தரவிட்டார்.
அமைச்சருக்கு வரவேற்பு
முன்னதாக தூத்துக்குடியில் இருந்து நெல்லைக்கு வரும் வழியில் பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் மேம்பாலம் அருகில் அமைச்சர் துரைமுருகனுக்கு நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ, நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் ஆகியோர் தலைமையில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஞானதிரவியம் எம்.பி., தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், பாளையங்கோட்டை யூனியன் தலைவர் கே.எஸ்.தங்கபாண்டியன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வில்சன் மணித்துரை, மாநகர துணை செயலாளர் மூளிகுளம் பிரபு, மண்டல தலைவர்கள் பிரான்சிஸ், ரேவதி பிரபு, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பரமசிவ அய்யப்பன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜான் ரபீந்தர், நாங்குநேரி ஒன்றிய செயலாளர்கள் ஆரோக்கிய எட்வின் (கிழக்கு), ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு (மேற்கு) உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நதிநீர் இணைப்பு பணிகள் ஆய்வு
தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு நதிநீர் இணைப்பு திட்ட பணிகளை அமைச்சர் துரைமுருகன் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.