தந்தையை இழந்து வறுமையில் வாடிய குடும்பத்துக்கு அமைச்சர் காந்தி உதவி


தந்தையை இழந்து வறுமையில் வாடிய குடும்பத்துக்கு அமைச்சர் காந்தி உதவி
x

ராணிப்பேட்டை அருகே தந்தையை இழந்து வறுமையில் வாடிய குடும்பத்தை அமைச்சர் காந்தி நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாக கூறினார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை அருகே தந்தையை இழந்து வறுமையில் வாடிய குடும்பத்தை அமைச்சர் காந்தி நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாக கூறினார்.

வறுமையில் வாடிய குடும்பம்

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா ஒன்றியம் புளியங்கண்ணு கிராமத்தில் வசித்து வருபவர் மல்லீப்பூ. இவரது மகள் செல்வி (வயது 14), மகன் பழனி (16). மல்லீப்பூவின் கணவர் பாபு ஏற்கனவே இறந்துவிட்டார். மல்லிப்பூவும் விபத்து ஒன்றில் கால்களை இழந்துவிட்டார். இதனால் குடும்பம் வறுமையில் தவித்தது.

இந்தநிலையில் பழனி குடுகுடுப்பை தொழில் செய்து வரும் பணம் தினசரி உணவிற்கு போதாததால், செல்வி 9-ம் வகுப்பு படிப்பினை நிறுத்திவிட்டு, தன்னுடைய உறவினருடன், பிளாஸ்டிக் பொருட்களை, தெருத்தெருவாக விற்கும் தொழில் செய்து வருவது அமைச்சர் காந்திக்கு தெரிய வந்தது.

அமைச்சர் காந்தி உதவி

இதனையடுத்து அமைச்சர் காந்தி அந்த ஏழைப்பெண்ணின் வீட்டிற்கு நேற்று நேரில் சென்று செல்வி கல்லூரி முடிக்கும் வரை படிப்புக்கான அனைத்து செலவுகளையும் தானே ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார். பழனிக்கு சோளிங்கரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மாதம் ரூ.16 ஆயிரம் சம்பளத்தில்வேலை வழங்கவும் ஆவன செய்தார்.

மல்லிப்பூக்கு முதியோர் உதவித்தொகை உடனடியாக வழங்கவும் உத்தரவிட்டார். சிறுமியின் குடும்பம் வசித்துவரும் குடிசை வீட்டிற்கு ஏற்கனவே பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதனை உட்பிரிவு செய்து அரசின் வீடுகள் வழங்கும் திட்டத்தில் புதிய வீடு கட்ட கலெக்டரை கேட்டுக்கொண்டார். மேலும் அந்த சிறுமியிடம் நன்றாக படிக்க வேண்டும். ஏதேனும் கஷ்டம் இருந்தால் தன்னை நேரடியாக வந்து பார்க்கலாம் என அமைச்சர் தெரிவித்தார்.

பள்ளியில் சேர்ப்பு

இதனைத் தொடர்ந்து மாணவி செல்வியை புளியங்கண்ணு அரசு மேல்நிலைப்பள்ளிக்கு அழைத்துச் சென்று 9-ம் வகுப்பில் அமர வைத்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் புத்தகங்களை வழங்கினார்.

உதவி கலெக்டர் வினோத் குமார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றிய குழு தலைவர் சேஷா வெங்கட், ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன் மற்றும் வருவாய்த்துறையினர் உடனிருந்தனர்.


Next Story