அங்கன்வாடி பணியாளர்களுக்கு 'ஸ்மார்ட் போன்' அமைச்சர் கீதாஜீவன் அறிவிப்பு


அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஸ்மார்ட் போன் அமைச்சர் கீதாஜீவன் அறிவிப்பு
x

குழந்தைகளின் வளர்ச்சிக்கான பதிவை மேற்கொள்ள அங்கன்வாடி பணியாளர்களுக்கு ‘ஸ்மார்ட் போன்’ வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் கீதாஜீவன் அறிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் நேற்று சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மானியத்தின் மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அவர்களுக்கு அமைச்சர் கீதா ஜீவன் பதிலுரை வழங்கி அந்தத் துறைக்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன் விவரம் வருமாறு:-

* ரூ.25.70 கோடி செலவில் 17 ஆயிரத்து 312 அரசு பள்ளி சத்துணவு மையங்களுக்கு புதிய சமையல் உபகரணங்கள் வழங்கப்படும்.

* சமூக நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் சத்துணவு திட்டம், புகார் குழுக்கள், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் ஆகியவற்றின் செயல்பாடுகளை துரிதப்படுத்தவும், கண்காணிக்கவும் இணையதளம் முகப்பு மற்றும் செல்போன் செயலிகள் உருவாக்கப்படும்.

* சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு தையல் எந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் நவீன உயர்ரக தையல் எந்திரங்கள் வழங்கப்படும்.

ஸ்மார்ட் போன்

* 30 ஆண்டுகளை கடந்த நிலையில் தற்போதுள்ள சமூக, பொருளாதார சூழ்நிலைகளுக்கு ஏற்ப முதல்-அமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மறுசீரமைக்கப்படும்.

* 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் வளர்ச்சியை கண்காணித்து நிகழ் நேர பதிவு மேற்கொள்ள ஏதுவாக 18 ஆயிரத்து 573 அங்கன்வாடி பணியாளர்களுக்கு ரூ.17.53 கோடி செலவில் ஸ்மார்ட் போன் வழங்கப்படும்.

இனிப்பு பொங்கல்

* சத்துணவு திட்டத்தில் பயன் அடைந்து வரும் குழந்தைகளுக்கு கருணாநிதியின் பிறந்த நாளன்று இனிப்பு பொங்கல் வழங்கப்படும்.

* பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகள் குறித்த தரவுகளை சேமிக்கும் இணையதளம் நிறுவுதல், நிகழ்நேர கைபேசி செயலி மூலம் ஆய்வு மற்றும் கண்காணிப்பு ஆகியவை மேற்கொள்ளப்படும்.

ஸ்மார்ட் போர்டு

* பாலியல் குற்றங்கள் அல்லாத பிற துன்புறுத்தல்கள் மற்றும் சுரண்டலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக ரூ.50 லட்சம் நிதி தொகுப்பு உருவாக்கப்படும்.

* சமூக பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படும் 34 அரசு குழந்தைகள் இல்லங்களிலும் திறன் பலகைகள் ஸ்மார்ட் போர்டு வழங்கப்படும்.

* திருச்சி, கோவை மற்றும் சென்னையில் குழந்தைகளுக்கான போதை தடுப்பு மையங்கள் அமைக்கப்படும்.

* தூத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறை அரசு குழந்தைகள் இல்லம் மற்றும் சென்னை ராயபுரம் சிறுவருக்கான அரசு குழந்தைகள் இல்லம் ஆகியவற்றில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும்.

* சென்னை சிறுமியருக்கான அரசினர் குழந்தைகள் இல்லம் மற்றும் நெல்லை, சென்னை, மதுரை அரசினர் கூர்நோக்கு இல்லங்களில் பணியாளர் குடியிருப்பு கட்டப்படும்.

இவ்வாறு அவர் அறிவித்தார்.

இலவச பஸ் திட்டம்

முன்னதாக அமைச்சர் கீதா ஜீவன் தனது பதிலுரையில் பேசியதாவது:-

அரசு தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தால் 1 லட்சத்து 54 ஆயிரத்து 108 பேர் பயன்அடைந்து வருகின்றனர். இத்திட்டத்தின் மூலம் மாணவர்களின் வருகையும், கற்றல் திறனும் அதிகரித்துள்ளது. இடைநிற்றல் தவிர்க்கப்படுகிறது.

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் புதுமைப்பெண் திட்டம் மூலம் இதுவரை 2 லட்சத்து 9 ஆயிரத்து 365 மாணவிகள் பயன் அடைந்து வருகின்றனர். உயர்கல்வியை தொடராமல் விட்ட 11 ஆயிரத்து 682 மாணவிகள் இத்திட்டத்தின் மூலம் இந்த ஆண்டு உயர்கல்வியில் சேர்ந்து பயன் அடைந்து வருகின்றனர்.

மேலும், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு உயர்கல்வியில் சேர்ந்த மாணவிகளின் எண்ணிக்கை 29 சதவீதம் அதிகரித்து உள்ளது.

மகளிருக்கு கட்டணமில்லா பஸ் பயணத்திட்டம் மூலம் 259 கோடியே 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணங்களை இதுவரை பெண்கள் மேற்கொண்டுள்ளனர். கடந்த ஆட்சியில் முதல்-அமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 18 வயது முடிவுற்ற பெண்களுக்கு முதிர்வுத் தொகை பெற்று வழங்கப்படாத நிலை இருந்து வந்தது. இந்த நிலையில் இந்த ஆட்சியில் 2021-ம் ஆண்டு மே முதல் கடந்த மார்ச் மாதம் வரை 96 ஆயிரத்து 497 பெண்களுக்கு ரூ.256.58 கோடி முதிர்வுத் தொகையை அரசு வழங்கியுள்ளது.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் தொடங்கியது. விவாதத்தை தொடங்கி வைத்து அ.தி.மு.க. உறுப்பினர் அருண்மொழி தேவன் (புவனகிரி) பேசியதாவது:-

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது போல, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஸ்மார்ட் அடையாள அட்டை வழங்க வேண்டும். எனது, தொகுதி பிரச்சினை தொடர்பாக கவன ஈர்ப்பு கொடுத்திருந்தேன். இதுவரை எடுத்துக்கொள்ளப்படவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

கவன ஈர்ப்பு

தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:-

உறுப்பினர் இங்கே பேசும்போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஸ்மார்ட் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்றார். முதல்-அமைச்சரின் கவனத்துக்கு ஏற்கனவே எடுத்துச்செல்லப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. விரைவில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஸ்மார்ட் அடையாள அட்டை வழங்கப்படும்.

இதுவரை, 666 கவன ஈர்ப்புகள் வரப்பெற்றுள்ளன. அதில், 134 கவன ஈர்ப்புகள் தகுதியானவையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைக்கு பதிலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. 9 கவன ஈர்ப்புகளுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளன. 12 சிறப்பு கவன ஈர்ப்பாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. 6 தகவல் கோருதல் அடிப்படையில் பதில் அளிக்கப்பட்டு உள்ளது. தினமும் 2 கவன ஈர்ப்பு வீதம் எடுத்துக்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொட்டில் குழந்தை திட்டம்

அதன்பின்னர் பேசிய சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், ''மாற்றுத்திறனாளிகள் துறைக்கு ரூ.1,106 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இது கடந்த ஆட்சியில் ஒதுக்கப்பட்ட நிதியை விட ரூ.500 கோடி அதிகமாகும். கடந்த 2 ஆண்டுகளில் 1800 மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது. தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ் 1,346 ஆண் குழந்தைகளும், 4,582 பெண் குழந்தைகளும் பயன்பெற்றுள்ளனர்'' என்றார்.


Next Story