பாரதியாா் சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை
எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
எட்டயபுரம்:
எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பிறந்தநாள் விழா
எட்டயபுரத்தில் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 141-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு மணிமண்டபத்தில் உள்ள பாரதியார் உருவச் சிலைக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி, எட்டயபுரம் தாசில்தார் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பின்னர் அங்குள்ள பாரதியின் புகைப்படங்களை பார்வையிட்டனர்.
மாலை அணிவித்து மரியாதை
அதனை தொடர்ந்து மேலவாசல் பகுதியில் உள்ள பாரதியின் இல்லத்தில் பாரதியாரின் மார்பளவு சிலைக்கு கலெக்டர் செந்தில்ராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் எட்டயபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கர நாராயணன், தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீத கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஓவியம் வரைந்த மாணவிகள்
பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் மணிமண்டபத்தில் 'மகாகவி பாரதியும் கண்ணனும்' எனும் தலைப்பில் ஓவிய பயிற்சி பள்ளி மாணவிகள் ஓவியம் வரைந்தனர். கோவில்பட்டி ரோட்டரி சங்கம், கொண்டயராஜூ ஓவிய பயிற்சி பள்ளி, பாரதியார் நினைவு அறக்கட்டளை சார்பில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்கத் தலைவர் ரவி மாணிக்கம் தலைமை தாங்கினார். ரோட்டரி மாவட்ட தலைவர் முத்து செல்வம், ஓவியப்பயிற்சி பள்ளி நிர்வாகி முருக பூபதி, பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்து முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாரதி நினைவு மண்டபம், பாரதி பிறந்த இல்லத்தில் உள்ள பாரதியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் மணிமண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஓவிய பயிற்சி பள்ளி மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து மகாகவி பாரதியும் கண்ணனும் என்ற தலைப்பில் ஓவியம் வரைந்தனர். பாரதியார் வேடமணிந்த மாணவ-மாணவிகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு ஓவிய போட்டி நடந்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் கோவில்பட்டி ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் வீராச்சாமி, நாராயணசாமி, உறுப்பினர்கள் தாமோதர கண்ணன், மாரியப்பன், ஓவிய பயிற்சி பள்ளி ஆசிரியை கோமதி, வாசனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.