அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களிடம் குறைகள் கேட்கிறார்
தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் வியாழக்கிழமை முதல் மூன்று நாட்கள் பொதுமக்களிடம் குறைகள் கேட்கிறார்.
தூத்துக்குடி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன் நாளை (வியாழக்கிழமை) முதல் 3 நாட்கள் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்க உள்ளார். நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் குறைகளை தெரிவித்து பயனடையலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அமைச்சர் கீதாஜீவன் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
வியாழக்கிழமை
அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்கிறார். அதன்படி நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலத்திலும், மாலை 5 மணிக்கு மீளவிட்டானிலும் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்கிறார்.
குறைகேட்பு
நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கிறார். மாலை 5 மணிக்கு தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 23-வது வார்டு பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்கிறார். வருகிற 18-ந் தேதி காலை 9.30 மணிக்கு மாநகராட்சி 28-வது வார்டு பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்பதுடன், அன்று மாலை 3.30 மணிக்கு முத்தையாபுரம் மரியம் மகாலில் நடைபெறும் மகளிர் தினவிழா மற்றும் மாலை 5 மணிக்கு தூத்துக்குடியில் நடைபெற உள்ள வியாபாரிகள் சங்க மாநாடு ஆகியவற்றிலும் பங்கேற்க உள்ளார். குறைகள் கேட்பு நிகழ்ச்சியில் அந்தந்த பகுதி பொதுமக்கள் குறைகளை அமைச்சரிடம் நேரில் தெரிவித்து பயனடையலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
முத்திரைத்தாள் தட்டுப்பாடு
மேலும் அமைச்சர் கீதாஜீவனிடம், தமிழ்நாடு பத்திரம் மற்றும் நகல் எழுதுவோர் சங்க மாநில தகவல் தொடர்பு செயலாளர் சிவசங்கரராமன் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில், தூத்துக்குடி ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாகத்தில் தூத்துக்குடி கீழுர், தூத்துக்குடி மேலூர், தூத்துக்குடி-1 இணை சார்பதிவகம், தூத்துக்குடி-2 இணை சார்பதிவகம் ஆகிய 4 சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தினமும் சுமார் 200 பத்திரங்கள் வரை பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அரசுக்கு முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணம் மூலம் பல கோடி வருவாய் கிடைத்து வருகிறது.
ஆனால் கடந்த 3 மாதங்களாக பத்திரப்பதிவுக்கு போதிய அளவில் முத்திரைத்தாள்கள் கிடைக்காமல் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, தூத்துக்குடியில் தற்போது நிலவி வரும் முத்திரைத்தாள் தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.