சங்ககிரியில் 1,175 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்
சங்ககிரியில் 1,175 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.
சங்ககிரி:
சங்ககிரி அரசு பள்ளி
சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். இதில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் முன்னிலை வகித்தார்.
இதில் சங்ககிரி, மகுடஞ்சாவடி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 11 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு படிக்கும் 627 மாணவர்கள், 548 மாணவிகள் என மொத்தம் 1,175 மாணவ-மாணவிகளுக்கு ரூ.59 லட்சத்து 80 ஆயிரத்து 341 மதிப்புள்ள சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
எம்.எல்.ஏ., எம்.பி.
விழாவில் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேயர் ராமச்சந்திரன், தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர்கள் டி.எம்.செல்வகணபதி (மேற்கு), எஸ்.ஆர்.சிவலிங்கம் (கிழக்கு), உதவி கலெக்டர் சவுமியா, மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியம், சங்ககிரி அட்மா திட்டக்குழு உறுப்பினர் கே.எம்.ராஜேஷ், பேரூராட்சி தலைவர் மணிமொழி, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பி.தங்கமுத்து, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கே.ஜி.ராஜவேலு, பெண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மணி எம்.எல்.ஏ.
ஓமலூர் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. பள்ளி உதவி தலைமையாசிரியர் அமலோற்பவமேரி வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ. பல்பாக்கி கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மணி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 489 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசினார்.
இதில் வானூர் ஒன்றியக்குழு தலைவர் ராஜேந்திரன், நகர அ.தி.மு.க. செயலாளர் சரவணன், ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ், ஒன்றிய கவுன்சிலர் சரவணன், செந்தில்குமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சண்முகம், நகர பேரவை செயலாளர் தளபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மகுடஞ்சாவடி
மகுடஞ்சாவடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஒன்றிய தி.மு.க. செயலாளர் பச்சமுத்து கலந்து கொண்டு 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளியின் பெற்றோர் ஆசியர் கழக தலைவர் குமார் என்ற பச்சமுத்து, மாவட்ட மாணவா் அணி அமைப்பாளர் கண்ணன், ஒன்றிய பொருளாளர் புஷ்பநாதன், பள்ளி தலைமை ஆசிரியர் ராஜாதேசிங்கு உள்பட பலர் கலந்து கொண்டனர்.