18 ஒன்றியக்குழு தலைவர்களுக்கு கார்-அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்


18 ஒன்றியக்குழு தலைவர்களுக்கு கார்-அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்
x
தினத்தந்தி 29 Jun 2023 3:09 AM IST (Updated: 29 Jun 2023 4:52 PM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் 18 ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்களுக்கு காரை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.

சேலம்

புதிய கார்

சேலம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் 18 பேருக்கு அரசு சார்பில் கார் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு ஒன்றியக்குழு தலைவர்களுக்கு கார் வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி கடந்த 2008-ம் ஆண்டு முதன் முதலாக ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர்கள் பயன்பாட்டிற்காக வாகனங்களை வழங்கினார். தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்களுக்கும் புதிய கார்கள் வழங்கப்படும் என்று அறிவித்தார். அந்த வகையில் 13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் புதிய கார்கள் வழங்கப்பட்டுள்ளன.

பாதாள சாக்கடை

மேலும் அனைத்து பகுதிகளிலும் குப்பை சேகரிப்பது என்பது மிகப்பெரிய பணியாக உள்ளது. சென்னை மாநகராட்சி மேயர், கவுன்சிலர்கள மற்றும் அலுவலர்கள் குழு வெளிநாடுகளுக்கு சென்று அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களை பார்வையிட்டு உள்ளனர். அந்த திட்டங்களை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த தனி கவனம் செலுத்தப்பட்டு வரப்படுகிறது.

பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. புதிதாக சாக்கடை கால்வாய் அமைக்கும் பகுதிகளில் பழுதாகும் சாலைகளை 2 நாட்களில் சீரமைக்க வேண்டும் என்று அலுவலர்களிடம் கூறப்பட்டு உள்ளன.

இயற்கை சாதகமாக உள்ளது

டெல்டா பகுதி விவசாயிகள் பாதிக்காத வகையில் விவசாயத்திற்கு போதிய அளவு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பெங்களூருவில் தற்போது மழை பெய்யத்தொடங்கி உள்ளது. எனவே டெல்டா பாசனத்திற்கு முழுமையான தண்ணீர் கிடைக்க இயற்கையும் சாதகமாக உள்ளது. மேலும் கர்நாடகாவில் இருந்து தண்ணீர் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர், கூடுதல் கலெக்டர் அலர்மேல் மங்கை, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, எம்.எல்.ஏ.க்கள் வக்கீல் ராஜேந்திரன், அருள், சதாசிவம், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் ரேவதி ராஜசேகர், முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.சிவலிங்கம், துணை மேயர் சாரதாதேவி மற்றும் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story