மேல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேசிய தர சான்றுஅமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்
மேல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேசிய தர சான்றிதழை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
பேரணாம்பட்டு
மேல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேசிய தர சான்றிதழை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
பேரணாம்பட்டு ஒன்றியம் மேல்பட்டி ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 10 படுக்கை வசதிகளுடன் இயங்கி வருகிறது. மாதந்தோறும் சராசரியாக 50 முதல் 60 வரை சுகபிரசவங்கள் நடைபெற்று வருகின்றன.
கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 30 படுக்கை வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்தப்பட்டு ரூ 2 கோடியே 30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கி நடைபெற்று பணிகள் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன், நவம்பர் மாதங்களில், புதுடெல்லியிலிருந்து தேசிய அளவிலான குழுவினர் நடத்திய ஆய்வில் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சுகாதாரம், தரமான சேவை, நோயாளிகளுக்கான சேவை, பிரசவங்களின் எண்ணிக்கை, மருத்துவ சேவையில் நோயாளின் திருப்தி ஆகியவற்றின் அடிப்படையில் மாநில அளவிலான தேசிய தரச்சான்று பெற பரிந்துரைத்தனர்.
அதன்படி தேர்வு செய்யப்பட்ட 6 ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே வேலூர் மாவட்டத்தில் பேரணாம்பட்டு ஒன்றியத்தை சார்ந்த மேல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையமானது 92.81 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளது. இதற்கான தேசிய தரச்சான்றினை நேற்று சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நடந்த விழாவில் மேல் பட்டி வட்டார ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் கலைச்செல்வியிடம் மக்கள் நல்வாழ்வு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
தேசிய தரச்சான்று பெற்றுள்ள மேல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ வசதிகள் மேம்படுத்தி கொள்ள 3 ஆண்டுகளுக்கு தலா ரூ 3 லட்சம் வீதம் வழங்கப்படுகிறது. ஏற்கனவே இம் மருத்துவமனையானது மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் பரிந்துரையின் படி சுகாதாரத்தில் உயர்ந்த தரத்தில் இயங்கியமைக்கு காயகல்ப் விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.