அரசு ஆஸ்பத்திரிகளில் முகக்கவசம் கட்டாயம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு வரும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை,
சென்னை, ஓமந்தூரார் அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரியில் நேற்று, 'தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டம்' என்ற திட்டத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதேபோல, 2023-ல் மாவட்ட சுகாதாரப் பேரவையின் 16 மாவட்ட பிரதிநிதிகளை பாராட்டி கேடயம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், எம்.எல்.ஏக்கள் ஈ.ஆர்.ஈஸ்வரன், பூமிநாதன், வெங்கடேசன், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில்குமார், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர் உமா, தேசிய நலவாழ்வு குழும இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதிஷ், உணவு பாதுகாப்புத்துறை கமிஷனர் லால்வேனா, பொதுசுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம், மருத்துவ கல்வி இயக்குனர் சாந்திமலர் மற்றும் மாவட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
26 அரசாணைகள்
இதைத்தொடர்ந்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு மாநில சுகாதார சீரமைப்பு திட்டத்தின் ஒரு அங்கமாக மாநில சுகாதார பேரவையை கடந்த ஆண்டு இதே நாளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாநில சுகாதார பேரவை என்பது இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. இந்த பேரவையில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்று 26 அரசாணைகள் வெளியிடப்பட்டது.
இந்த ஆணைகளுக்காக இதுவரை ரூ.23.50 கோடி செலவிடப்பட்டு இருக்கிறது. மாநில அளவிலான இந்த பேரவையில் மாவட்டந்தோறும் கலெக்டர்கள் தலைமையில் கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதில், நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் செயல் திட்டங்களாக மருத்துவக் கட்டமைப்புகள் மேம்படுத்துவதற்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
உலக வங்கி
சுகாதார பேரவை உலக அளவில் தென்கொரியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் மிகச்சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டத்தின் திட்ட மதிப்பீடு ரூ.2,854.74 கோடி ஆகும். இதில் உலக வங்கியின் பங்களிப்பு ரூ.1,998.32 கோடி. ஏறத்தாழ 70 சதவீதம் ஆகும். தமிழ்நாடு அரசின் பங்களிப்பு ரூ.856.42 கோடி ஆகும்.
இந்த திட்டத்தின்படி உலக வங்கி இதுவரை தமிழ்நாட்டிற்கு ரூ.1,303.56 கோடி தந்திருக்கிறார்கள். இந்த நிதியின் மூலம் ஏற்கனவே ரூ.263.09 கோடி அரசு ஆஸ்பத்திரிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு செலவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல, பேரறிஞர் அண்ணா பெயரினால் காஞ்சீபுரம் அருகில் ரூ.100 கோடி செலவில் புற்றுநோய் ஆஸ்பத்திரியை மேம்படுத்திடும் நோக்கில் பணிகள் நடைபெற்று வருகிறது.
புதிய மேற்படிப்பு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் நடைபெற்ற நிதிநிலை அறிக்கையின்போது ரூ.165 கோடி செலவில் புதிய ஆஸ்பத்திரி கட்டிடம், முழு உடற்பரிசோதனை கட்டிடம் தொடங்கப்படும் என்று அறிவித்தார். அதற்காகவும் இந்த நிதி செலவிடப்பட்டு கொண்டிருக்கிறது. இதேபோல, இந்த துறையின் மூலம் புதிய மேற்கலை படிப்பு ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது.
அனைத்திற்கும் மேலாக அவசரகால அறுவை சிகிச்சை செயல்திறன் கடந்த ஆண்டு 23 சதவீதமாக இருந்தது, இந்த ஆண்டு 77 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கொரோனா அதிகரிப்பு
இன்றைக்கு கொரோனா பாதிப்பு என்பது அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளில் ரேண்டமாக 2 சதவீதம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக, துபாய் மற்றும் சிங்கப்பூரில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் கடந்த 24 மணி நேரத்திற்கான பாதிப்பு 123 பேர். இந்திய அளவில் 3,095 பேர் ஆகும்.
முகக்கவசம்
கொரோனா தடுப்பு விதிமுறைகள் நடைமுறையில் இருந்தாலும் நாளை (இன்று) முதல் அனைத்து அரசு அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிகள், மாவட்ட தலைமை ஆஸ்பத்திரிகள், வட்டார அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் என்று தமிழ்நாட்டில் இருக்கும் 11,300-க்கும் மேற்பட்ட மருத்துவ கட்டமைப்புகளுக்கு வரும் நோயாளிகள், பார்வையாளர்கள், டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை 100 சதவீதம் உறுதிபடுத்திட வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறோம்.
தற்காப்புக்காக...
ஏனென்றால் நோய் தொற்று என்பது முதலில் ஆஸ்பத்திரிகளிலேயே கூடத்தொடங்குகிறது. எனவே, ஆஸ்பத்திரிகளில் இத்தகைய சீர்திருத்தத்தை தொடக்க இருக்கிறோம்.
பொதுமக்கள் அச்சம் கொள்ளும் வகையில் பெரிய அளவிலான நோய் தொற்று பாதிப்புகள் இல்லை என்றாலும் நம்மை தற்காத்துக்கொள்ளும் வகையில் முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.