கடற்கரையில் தூய்மை பணியில் ஈடுபட்ட அமைச்சர் மனோ தங்கராஜ்


கடற்கரையில் தூய்மை பணியில் ஈடுபட்ட அமைச்சர் மனோ தங்கராஜ்
x

மணக்குடி கடற்கரையில் அமைச்சர் மனோ தங்கராஜ் தூய்மை பணியில் ஈடுபட்டார். அப்போது கடல் வளத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

மணக்குடி கடற்கரையில் அமைச்சர் மனோ தங்கராஜ் தூய்மை பணியில் ஈடுபட்டார். அப்போது கடல் வளத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

தூய்மை பணி

ஜி20 மாநாடு இந்த ஆண்டு இந்தியாவில் நடக்கிறது. இதையொட்டி இந்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகமானது தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து மணக்குடி கடலோர பகுதியில் ஜி20 மாபெரும் தூய்மைப்படுத்தும் பணியை நேற்று மேற்கொண்டது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், வன அலுவலர் இளையராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு தூய்மை பணியை தொடங்கி வைத்தார். பின்னர் அங்குள்ள மணல் சிற்பத்தை பாா்வையிட்டார். அதைத் தொடர்ந்து அவர் பேசும் போது கூறியதாவது:-

கடல் நீர் மாசு

கடல் வளத்தை பாதுகாக்க வேண்டும். கடற்கரை பகுதியை தூய்மைப்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் கடலில் கலப்பதாலும், கழிவுநீர் கடலில் கலப்பதாலும் கடல் நீர் மாசுபடுகிறது. இதனை தடுக்கும் வகையில் கடலோர பகுதிகளை தூய்மைப்படுத்தும் மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறுகிறது. கடலோர பகுதிகளில் தொடர்ந்து தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ள வேண்டும்.

அதற்கு கடலோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். பூமியில் உயிரினங்கள் வாழ சுத்தமான மற்றும் சுகாதாரமான கடல் பகுதி இன்றியமையாதது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

பொதுமக்களிடம் விழிப்புணர்வு

கடல் பகுதியை மாசு மற்றும் கழிவுகளிலிருந்து பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும். நமது முயற்சிகள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். கடற்கரைகளில் குப்பைகள் இல்லாதவாறு பார்த்துக்கொள்வது ஒவ்வொருடைய கடமையாகும்.

பிளாஸ்டிக் பொருட்கள் கடலில் கலப்பதால், கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நிலையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறையினை பின்பற்றி, இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும். குமரி மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்ற முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

உறுதிமொழி ஏற்பு

அதைத் தொடர்ந்து கடல் மாசுபடுவது தவிர்ப்பது குறித்த உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது. மேலும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். அமைச்சர் மனோ தங்கராஜ் தூய்மை பணியில் ஈடுபட்டதோடு, கடல் மாசுபடுவதை தடுப்பது குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், மாவட்ட சுற்றுச்சூழல் நல அலுவலர் சுயம்புதங்கம், மணக்குடி ஊராட்சி தலைவர் சிறில் நாயகம், வக்கீல் சதாசிவம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story