சேலம் ஆவின் பண்ணையில் ரூ.5¾ கோடியில் பால் உற்பத்தியாளர்களுக்கு நலத்திட்ட உதவி-அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்
சேலம் ஆவின் பால் பண்ணையில் ரூ.5¾ கோடி மதிப்பில் பால் உற்பத்தியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்.
நலத்திட்ட உதவிகள்
சேலம் இரும்பாலை ரோட்டில் உள்ள ஆவின் பால் பண்ணையில் நேற்று பால் உற்பத்தியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை தாங்கி பேசினார்.
இதையடுத்து அவர் 237 பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.72 லட்சத்தில் பசு வாங்குவதற்கு கடனுதவி, 190 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பால் உற்பத்தியாளர்களுக்கு தலா ரூ.10 ஆயிரத்தில் தீவன விதைகள், தேசிய பால்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டில் 200 தானியங்கி பால் கறக்கும் கருவிகள் என மொத்தம் ரூ.5 கோடியே 83 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதையடுத்து ஆவின் பால்பண்ணையில் உள்ள பல்வேறு பிரிவுகளுக்கு சென்று அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொள்முதல் விலை
தமிழ்நாட்டில் பால் உற்பத்தியை பெருக்குவதற்கு 2 லட்சம் கறவை மாடுகள் கொடுக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான கடனுதவிகள் உள்ளூர் வங்கிகள் மூலமாக வழங்கப்படும். விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் கறவை மாடுகளை காப்பீடு செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனம் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இடையே பாலமாக விளங்குகிறது.
ஆவின் நிறுவனத்தை மேம்படுத்துவதற்கு விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் கருத்துகள் கேட்கப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்பது, உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளில் ஒன்று.
வெண்மை புரட்சி
ஆவின் என்பது ஒரு சேவை நிறுவனம். இங்கு கூடுதல் விலை வைத்து வாடிக்கையாளர்களுக்கு பால் விற்க முடியாது. ஆவின் நிறுவனத்தினை மேம்படுத்துவதற்கு தடையாக உள்ள சவால்கள் மற்றும் பலவீனங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். அதனைத்தொடர்ந்து, விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகள் மூலம் பால் உற்பத்தியை பெருக்குவதற்கு தீவனங்களை குறைந்த விலையில் கொடுப்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.
தமிழ்நாட்டில் வெண்மை புரட்சியை மேம்படுத்தும் விதமாக பால் உற்பத்தியாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம். தனியார் நிறுவனங்கள் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பால் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பால்வளத்துறை ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குனர் சுப்பையன், மாவட்ட கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், எம்.எல்.ஏ.க்கள் வக்கீல் ராஜேந்திரன், அருள், ஆவின் பொதுமேலாளர் விஜய்பாபு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.