பேரிடர் மீட்பு மையங்கள் அமைய உள்ள இடத்தை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு
கொள்ளிடம் பகுதியில் பேரிடர் மீட்பு மையங்கள் அமைய உள்ள இடத்தை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு செய்தார்
கொள்ளிடம்:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம் ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சி நாதல்படுகை மற்றும் முதலைமேடுதிட்டு ஆகிய கிராமங்களில் ரூ.16 கோடி மதிப்பீட்டில் 2 பேரிடர் மீட்பு மையங்கள் அமைய இருக்கும் இடத்தினை சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும் ஊரக உள்ளாட்சி துறை சார்பாக கொள்ளிடம் மற்றும் குத்தாலம் ஆகிய இரண்டு ஒன்றிய குழு தலைவர்களுக்கு தலா ரூ.12.17 லட்சம் மதிப்பீட்டில் புதிய வாகனங்களுக்கான சாவிகளை ஒன்றிய குழு தலைவர்களிடம் வழங்கி வாகனத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தார். கொள்ளிடம் அருகே மாங்கனாம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதை அமைச்சர் மெய்ய நாதன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி, எம்.எல்.ஏ.க்கள் பன்னீர்செல்வம், நிவேதா முருகன்,சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா,தாசில்தார் செந்தில்குமார், ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் மஞ்சுளா, கிராமமக்கள் கலந்துகொண்டனர்.