ஒரு கோடி வீரர்களை உருவாக்கி விளையாட்டின் தலைநகரமாக தமிழகத்தை மாற்றுவதே அரசின் நோக்கம்-சேலத்தில் அமைச்சர் மெய்யநாதன் பேச்சு


ஒரு கோடி வீரர்களை உருவாக்கி விளையாட்டின் தலைநகரமாக தமிழகத்தை மாற்றுவதே அரசின் நோக்கம்-சேலத்தில் அமைச்சர் மெய்யநாதன் பேச்சு
x

ஒரு கோடி வீரர்களை உருவாக்கி விளையாட்டின் தலைநகரமாக தமிழகத்தை மாற்றுவதே அரசின் நோக்கம் என்று சேலத்தில் அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.

சேலம்

தொடங்கி வைத்தார்

சேலம் கந்தாஸ்ரமம் பகுதியில் எஸ்.ஆர்.பி. கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தமிழ்நாடு கிரிக்கெட் லீக் போட்டிகளின் தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. தலைமை தாங்கினார். இதில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் போட்டியில் பங்கேற்க உள்ள 8 அணிகளின் கேப்டன்களை பாராட்டி வாழ்த்துகள் தெரிவித்தார்.

அப்போது அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது:-

கிராமப்புறத்தில் உள்ள திறமையான வீரர்களுக்கு இந்த போட்டி மிகவும் பயனுள்ளதாக அமையும். கொரோனா தொற்றுக்கு பிறகு விளையாட்டுத்துறை மீதான பார்வை மக்களிடையே அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளையாட்டு துறைக்கு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

அரசின் நோக்கம்

அதன் ஒரு பகுதியாக தான் செஸ் ஒலிம்பியாட் போட்டியை உலக நாடுகளே வியக்கும் வகையில் நடத்தி காட்டி உள்ளார். தி.மு.க. ஆட்சியில் கடந்த 16 மாதங்களில் தமிழகத்தில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு என ரூ.36 கோடி நிதியை முதல்-அமைச்சர் வழங்கி உள்ளார்.

இதுபோன்ற பல்வேறு நடவடிக்கையால் தமிழக வீரர்கள் தேசிய, சர்வதேச அளவிலும் பரிசுகளை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இந்தாண்டு 25 லட்சம் விளையாட்டு வீரர்களை உருவாக்கி உள்ளோம்.

அடுத்த ஆண்டு மேலும் 25 லட்சம் வீரர்களை உருவாக்குவது மட்டுமல்லாமல் விரைவில் ஒரு கோடி விளையாட்டு வீரர்களை உருவாக்கி சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் தமிழக வீரர்கள் பதக்கம் பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் விளையாட்டில் இந்தியாவின் தலைநகராக தமிழகத்தை மாற்றுவதே தமிழக அரசின் நோக்கமாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story