பெரியாறு பிரதான கால்வாய் ரூ.4.65 கோடியில் சீரமைக்கும் பணி- அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்


பெரியாறு பிரதான கால்வாய் ரூ.4.65 கோடியில் சீரமைக்கும் பணி- அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்
x

பெரியாறு பிரதான கால்வாய் ரூ.4 கோடியே 65 லட்சம் செலவில் சீரமைக்கும் பணியினை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்

மதுரை


பெரியாறு பிரதான கால்வாய் ரூ.4 கோடியே 65 லட்சம் செலவில் சீரமைக்கும் பணியினை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.

கட்டுமானங்கள்

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாங்குளம் கிராமம் கண்டமுத்துப்பட்டியில், நீர்வளத்துறை சார்பாக பெரியாறு பிரதான கால்வாய் மற்றும் அதன் பகிர்மான கால்வாய்கள் சீரமைக்கும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணிைய அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்து பேசியதாவது:- மேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட மாங்குளம் கிராமம் கண்டமுத்துப்பட்டியில் உள்ள பெரியாறு பிரதான கால்வாய் நெடுகை தூரம் 47/100 கி.மீ. முதல் நெடுகை தூரம் 58/000 கி.மீ. வரை மற்றும் அதன் பகிர்மான கால்வாய்கள் புனரமைக்கும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த பணிகள் நபார்டு நிதியுதவியுடன் ரூ.4 கோடியே 65 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் மதுரை கிழக்கு தாலுகாவில் உள்ள மாங்குளம், சின்னமாங்குளம், கண்டமுத்துபட்டி, மீனாட்சிபுரம், தேத்தம்பட்டி ஆகிய 5 கிராமங்களும் மற்றும் மேலூர் தாலுகாவில் உள்ள கிடாரிபட்டி, அரிட்டாபட்டி, ஆ.வல்லாளபட்டி, புலிப்பட்டி, எட்டிமங்களம், சூரக்குண்டு, கல்லம்பட்டி, தெற்குத்தெரு, நரசிங்கம்பட்டி, திருவாதவூர் ஆகிய 10 கிராமங்களும் பயன்பெறும்.

குறிப்பாக, பெரியாறு பிரதான கால்வாயின் இரு கரைகளில் உள்ள முட்செடிகளை அகற்றி கரைகள் பலப்படுத்தும் பணிகள், கால்வாயின் பக்கவாட்டு பகுதிகளில் சேதமடைந்த கான்கிரீட் சிலாப்புகள் அகற்றப்பட்டு சரிசெய்யும் பணிகள், பெரியாறு பிரதான கால்வாயின் குறுக்கே உள்ள மழைநீர் ஓடுபாலங்கள், மழைநீர் உட்புகும் மற்றும் வெளியேற்றும் கட்டுமானங்கள், நேரடி பாசன மடைகள் பழுதுபார்க்கும் பணிகள், பெரியாறு பிரதான கால்வாயின் குறுக்கே நெடுகை தூரம் 47/940 கி.மீ உள்ள பாலத்தை மறுகட்டுமான செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

மின் இணைப்பு

இந்த திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுவதன் மூலம் பெரியாறு பிரதான கால்வாய் மற்றும் அதன் பகிர்மான கால்வாயின் முழுநீர்கடத்தும் திறன் மீட்டெடுக்கப்பட்டு, விவசாயத்திற்கு தண்ணீர் வழங்கும் போது நீர்இழப்பு ஏற்படுவது குறைக்கப்பட்டு மதுரை கிழக்கு தாலுகா மற்றும் மேலூர் தாலுகாவில் உள்ள 15 கிராமங்களில் 192 கண்மாய்களுக்கும், 22 ஆயிரத்து 332 ஏக்கர் பாசன நிலங்களும் முழு பாசன வசதி பெறும்.

மேலும், நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து அந்த பகுதி மக்களின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வாழ்வாதாரம் உயரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி சின்னமாங்குளம் பகுதியில் உள்ள 40 குடியிருப்புகளை சார்ந்த பொதுமக்கள் தங்களது பகுதியில் மழை காலத்தில் சாலை பாதிப்பு ஏற்படுவதாகவும், இதனை தவிர்த்திடும் வகையில் புதிதாக சிறுபாலம் அமைத்திட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து அமைச்சர் மூர்த்தி, பொதுமக்களின் கோரிக்கையினை நிறைவேற்றிடும் விதமாக அந்த பகுதியில் புதிய பாலம் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்து ஒருவார காலத்திற்குள் பணிகளை தொடங்க வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், 40 குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வசதி வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

நிகழ்ச்சியில் வெங்கடேசன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், மாவட்ட ஊராட்சி தலைவர் சூரியகலா கலாநிதி, உறுப்பினர் நேரு பாண்டியன், வடிவேல் முருகன், ஒன்றிய செயலாளர் ரகுபதி, கிழக்கு யூனியன் தலைவர் மணிமேகலை, துணைத்தலைவர் பாலாண்டி, மாங்குளம் ஊராட்சி தலைவர் சத்யா மகேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வில்சன், சுந்தரசாமி, அரசு அலுவலர்கள், ஊராட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story