வணிகவரி, பதிவுத்துறை மூலம் ரூ.1½ லட்சம் கோடி வரி வருவாய்


வணிகவரி, பதிவுத்துறை மூலம் ரூ.1½ லட்சம் கோடி வரி வருவாய்
x

வணிகவரி மற்றும் பதிவுத்துறை மூலம் ஆண்டிற்கு ரூ.1½ லட்சம் கோடி வரி வருவாய் ஈட்டப்படுவதாக அமைச்சர் மூர்த்தி கூறினார்.

கிருஷ்ணகிரி

வணிகவரி மற்றும் பதிவுத்துறை மூலம் ஆண்டிற்கு ரூ.1½ லட்சம் கோடி வரி வருவாய் ஈட்டப்படுவதாக அமைச்சர் மூர்த்தி கூறினார்.

கலந்துரையாடல் கூட்டம்

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சேலம் வணிகவரி கோட்டம், சேலம் பதிவுத்துறை மண்டல அலுவலர்களுடன் கலந்துரையாடல் மற்றும் சீராய்வு கூட்டம் நடந்தது. வணிகவரி- பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, கைத்தறி-துணிநூல் துறை அமைச்சர் காந்தி ஆகியோர் தலைமை தாங்கினர். வணிக வரி ஆணையர் தீரஜ்குமார், அரசு செயலாளர் ஜோதி நிர்மலாசாமி, கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, செல்லக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பிரகாஷ் (ஓசூர்), ஜி.கே.மணி (பென்னாகரம்), சதாசிவம் (மேட்டூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். பதிவுத்துறை தலைவர் சிவனருள் வரவேற்றார்.

அமைச்சர் மூர்த்தி

கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேசும் போது கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் வணிகவரி, பதிவுத்துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை செய்துள்ளார். பொதுமக்களை பாதிக்காத வகையிலும், அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கவும், வரி செலுத்தாதவர்களை கண்டறிந்து வரி வசூல் செய்யவும், போலியான நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்வதை தடுத்திடவும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். அதன் அடிப்படையில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த வணிகவரித்துறை, பதிவுத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

வணிக வரித்துறை சார்பில் கடந்த ஆண்டு ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 960 கோடி இருந்த வருவாய் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. பதிவுத்துறை சார்பில் ரூ.13 ஆயிரம் கோடி இருந்த வருவாய் ரூ.20 ஆயிரம் கோடியாக இலக்கை எட்டியது. அதன்படி வணிக வரித்துறை மற்றும் பதிவுத்துறை மூலம் ஆண்டிற்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி வரி வருவாய் ஈட்டப்படுகிறது.

ரூ.4,200 கோடி வருவாய்

கடந்த ஆண்டு வரி செலுத்தாத 3 லட்சம் பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன் விளைவாக ரூ.67 கோடி உடனடியாக வசூல் செய்யப்பட்டது. சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பாதிக்காத வகையில் வரி வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 900 போலி நிறுவனங்கள் ஜி.எஸ்.டி. மட்டும் செலுத்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக வணிக வரித்துறையில் கடந்த 3 மாதத்தில் ரூ.16 ஆயிரம் கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பத்திரப்பதிவு துறையில் கடந்த 3 மாதத்தில் ரூ.4,200 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

போலி ஆவணங்கள் தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுத்து 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும். பதிவுத்துறையில் சொத்தின் நிலையான வழிகாட்டு மதிப்பை நிர்ணயம் செய்ய 5 பேர் கொண்ட குழு அமைத்து விரைவில் அரசாணை வெளியிடப்படும். போலி பதிவு தொடர்பாக புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் மூர்த்தி கூறினார்.

சீராய்வு கூட்டம்

முன்னதாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் பயன்படுத்தப்பட்ட தொன்மை வாய்ந்த அலுவலக பதிவேடு மற்றும் முத்திரைகள், அலுவலகத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் குறித்த கண்காட்சி அரங்கை அமைச்சர்கள் பார்வையிட்டனர். தொடர்ந்து வணிகவரித்துறை, பதிவுத்துறை அலுவலர்களுக்கான சீராய்வு கூட்டம் நடந்தது.

கூட்டத்தில், வணிக வரித்துறை கூடுதல் ஆணையர் பரமேஸ்வரன், இணை ஆணையர் ஜெயராமன், துணை ஆணையர் ஹேமா, கூடுதல் பதிவுத்துறை தலைவர்கள் சீனிவாசன், முகமதுஜபார் சாதிக், அங்கயற்கண்ணி, சேலம் மண்டல பதிவுத்துறை துணை தலைவர் பிரபாகர், கிருஷ்ணகிரி மாவட்ட பதிவாளர் கவிதா, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செங்குட்டுவன், தடங்கம் சுப்பிரமணி, முருகன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story