ஓடாநிலையில் நினைவுதினம் அனுசரிப்பு தீரன் சின்னமலை சிலைக்கு அமைச்சர் முத்துசாமி மாலை அணிவித்து அஞ்சலி- 123 பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகள்
நினைவுதினத்தையொட்டி அறச்சலூர் அருகே ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு அமைச்சர் முத்துசாமி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதுடன், 123 பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
நினைவுதினத்தையொட்டி அறச்சலூர் அருகே ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு அமைச்சர் முத்துசாமி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதுடன், 123 பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
நினைவுதினம் அனுசரிப்பு
கொங்கு மண்ணின் முதல் சுதந்திர போராட்ட வீரர் என்ற புகழுக்கு சொந்தக்காரர் தீரன் சின்னமலை. இவரது 218-வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.
தீரன்சின்னமலையின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு அன்று அவரது நினைவுதினம் தமிழ்நாடு அரசு சார்பில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலை நினைவு மணிமண்டபம் வளாகத்தில் அவரது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
அமைச்சர் அஞ்சலி
தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் ஏ.ஜி. வெங்கடாசலம், ஈ.ஆர்.ஈஸ்வரன், ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழக வீட்டுவசதித்துறை மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து நடந்த அரசு நிகழ்ச்சியில் தீரன் சின்னமலை வாரிசுதாரர்களை கவுரவித்தார். மேலும் 123 பேருக்கு ரூ.11 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.
திட்டப்பணிகள்
அப்போது அமைச்சர் சு.முத்துசாமி பேசும்போது கூறியதாவது:-
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை 218 ஆண்டுகளை தாண்டியும் இன்றும் நினைவுகூரப்படுகிறார். இதுபோல் இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த தியாகிகள் மற்றும் தமிழறிஞர்கள் புகழை இன்றைய இளைய தலைமுறையினர் மற்றும் பொதுமக்கள் அறிந்திடும் வகையில் பல்வேறு திட்டப்பணிகளை நமது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார்.
அதன் அடிப்படையில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பெருமையை மேலும் நிலைநிறுத்தும் வகையில் அவரது வாரிசுதாரர்களுடன் இணைந்து இந்த பகுதியில் செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆலோசித்து விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்.
இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி பேசினார்.
கண்காட்சி அரங்குகள்
முன்னதாக ஈரோடு மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை, வேளாண்மை உழவர் நலன் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து அமைச்சர் சு.முத்துசாமி பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா, கூடுதல் கலெக்டர் மனிஷ், உதவி கலெக்டர் (பயிற்சி) வினய்குமார் மீனா, மாநகராட்சி துணை மேயர் வி.செல்வராஜ், ஈரோடு ஆர்.டி.ஓ. சதீஸ்குமார், அறச்சலூர் பேரூராட்சி தலைவர் விஜயகுமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில்குமார், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பாலாஜி, தாசில்தார்கள் இளஞ்செழியன், பாலமுருகன், உதவி இயக்குனர் வரதராஜன், செயற்ெபாறியாளர் விஸ்வநாதன், மாவட்ட சமூக நல அதிகாரி சண்முகவடிவு, ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்ட அதிகாரி பூங்கோதை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி கோதைசெல்வி, அறச்சலூர் பேரூராட்சி செயல் அதிகாரி காந்தரூபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் தீரன் சின்னமலையின் மணிமண்டபத்துக்கு முன்பு பெண்கள், சிறுமிகள் கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய கும்மி நடனத்தை உற்சாகமாக ஆடினார்கள். முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.