சென்னையில் தமிழ் வழியில் மருத்துவக் கல்லூரி அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்


சென்னையில் தமிழ் வழியில் மருத்துவக் கல்லூரி அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
x

சென்னையில், விரைவில் தமிழ் வழி மருத்துவக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் நவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் பெண்களுக்கான சிறப்பு சிகிச்சை மையத்தினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மருத்துவக்கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு நேற்று பணி நிறைவு செய்வதையொட்டி அவருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அறுவை சிகிச்சை இல்லாமல் நீண்ட நாள் வலியுடன் அவதிப்படுகிற முதுகுத்தண்டு வலியுள்ளவர்களுக்கு ரேடியோ அலைவரிசை வலி நிவாரண சிகிச்சை கருவி ரோட்டரி சங்கம் மூலம் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் நிறுவப்பட்டுள்ளது. இதேபோல் தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் இந்த ஆண்டுக்குள் நிச்சயம் ரேடியோ அலைவரிசை வலி நிவாரண சிகிச்சை கருவி நிறுவப்படும்.

பெண்கள் சிகிச்சை மையம்

தனியார் ஆஸ்பத்திரியில் இந்த சிகிச்சைக்கு ரூ.40 ஆயிரம் வரை செலவாகும். ஆனால் அரசு ஆஸ்பத்திரிகளில் மேற்கொள்ளப்படும் இந்த சிகிச்சை முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது.

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் அதிநவீன கருவி, பெண்களுக்கான ஆலோசனை மற்றும் சிகிச்சைகள் வழங்குகின்ற வகையில், இயற்கை உணவு முறை, மார்பக புற்றுநோய், எழும்பு புரை நோய் போன்ற பல்வேறு பரிசோதனைகளை கண்டறிவதற்காக புதிய சிகிச்சை மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.1,000 செலவில் முழு உடல் பரிசோதனைக்கு முன்பதிவு செய்யும் வகையில் புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் என்னென்ன பரிசோதனைகள் மற்றும் பரிசோதனையின் முடிவுகள் போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம்.

தமிழ் வழி மருத்துவக் கல்லூரி

தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் இல்லையோ அங்கு மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை மத்திய அரசிடம் ஏற்கனவே வைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் தென்காசி, மயிலாடுதுறை, பெரம்பலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் காஞ்சீபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை மத்திய அரசிடம் தொடர்ந்து வைக்கப்பட்டு தற்போது அது பரிசீலனையில் உள்ளது.

இந்த 6 மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டபிறகு, சென்னையில் ஒரு புதிய தமிழ் வழி மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அந்தவகையில் கல்லூரியின் பாடப்புத்தகம் தமிழ் வழியில் இருக்க வேண்டும் என்கிற நிலையில், தற்போது 3 மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் பணியமர்த்தப்பட்டு, அதற்கான மொழி பெயர்க்கும் பணியினை கடந்த ஓராண்டாக செய்து வருகின்றனர்.

தற்போது முதலாம் ஆண்டு பாடப்புத்தகங்கள் மட்டும் மொழிமாற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ஒரு மாதத்துக்குள் பணிகள் நிறைவடைந்து அந்த பாடப்புத்தகங்கள் முதல்-அமைச்சர் மூலம் வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story