நாகை மாவட்டத்தில் ரூ.1¼ கோடியில் புதிய கட்டிடங்கள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்


நாகை மாவட்டத்தில்  ரூ.1¼ கோடியில் புதிய கட்டிடங்கள்   அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்
x

நாகை மாவட்டத்தில் ரூ.1¼ கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் ரூ.1¼ கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

புதிய கட்டிடங்கள் திறப்பு

நாகை மாவட்டம் கீழ்வேளூர், வாய்மேடு, பாலக்குறிச்சி ஆகிய ஊர்களில் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்கள் திறப்பு விழா கீழ்வேளூர் அரசு ஆஸ்பத்திரியில் நடந்தது. விழாவுக்கு கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். நாகை மாலி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு கீழ்வேளூர் அரசு ஆஸ்பத்திரியில் மகப்பேறு புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் பிரிவு கட்டிடத்தை திறந்து வைத்தார்.

மேலும் வாய்மேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புறநோயாளிகள் பிரிவு கட்டிடம், பாலக்குறிச்சியில் புதிய துணை சுகாதார நிலைய கட்டிடத்தின் கல்வெட்டுகளை திறந்து வைத்தார். விழாவில் பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருத்துவத்துறை இயக்குனர் செல்வ விநாயகம், தாட்கோ கழக தலைவர் மதிவாணன், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், மாவட்ட ஊராட்சி தலைவர் உமாமகேஸ்வரி, நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர், உதவி கலெக்டர் முருகேசன், வட்டார ஆத்மா குழு தலைவர் கோவிந்தராசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வாய்மேடு

வாய்மேட்டில் புதிய சுகாதார நிலைய கட்டிடம் திறக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு குத்து விளக்கு ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பழனியப்பன் தலைமை தாங்கி குத்து விளக்கு ஏற்றினார். ஊராட்சி மன்ற தலைவர் மலர் மீனாட்சி சுந்தரம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வேதரத்தினம், வைத்தியநாதன், வக்கீல் பாரிபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக சுகாதார ஆய்வாளர் அன்பரசன் வரவேற்றார். இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மகாலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.


Next Story