சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ரூ.2 கோடியில் கருணாநிதி ஆய்வு மைய கட்டிடம்-அமைச்சர் பொன்முடி அடிக்கல் நாட்டினார்


சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ரூ.2 கோடியில் கருணாநிதி ஆய்வு மைய கட்டிடம்-அமைச்சர் பொன்முடி அடிக்கல் நாட்டினார்
x

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ரூ.2 கோடி மதிப்பில் கருணாநிதி ஆய்வு மைய கட்டிடத்துக்கு அமைச்சர் பொன்முடி அடிக்கல் நாட்டினார்.

சேலம்

கருப்பூர்:

கருணாநிதி ஆய்வு மையம்

சேலம் கருப்பூரில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் முயற்சியால் சேலம் மாவட்ட தி.மு.க. சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்பட்டு கடந்த 2008-ம் ஆண்டு கலைஞர் கருணாநிதி ஆய்வு மையம் தொடங்கப்பட்டது.

ஆனால் ஆய்வு மையத்துக்கு என பிரத்யேகமாக கட்டிடம் எதுவும் கட்டப்படவில்லை. தற்போது கருணாநிதி ஆய்வு மைய கட்டிடத்துக்கு தமிழக அரசு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இதன்படி தரைத்தளம், முதல் தளத்துடன் 7,080 சதுர அடி பரப்பளவில் கலைஞர் ஆய்வு மைய கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதில் பெரியார் இருக்கை, அண்ணா இருக்கை மற்றும் கலைஞர் ஆய்வு மையம் செயல்பட உள்ளது. மேலும் நூலகம், கூட்ட அரங்கம் உள்ளிட்டவை அமைய உள்ளன.

அடிக்கல் நாட்டு விழா

இந்த நிலையில் கலைஞர் ஆய்வு மைய கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் கார்மேகம், அருள் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு கருணாநிதி ஆய்வு மைய கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டி, கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அமைச்சர் பொன்முடி, பேசியதாவது:-

தமிழகத்தின் எதிர்காலம் மாணவர்கள்தான். தமிழ்நாட்டை பற்றி, தமிழ் மொழியை பற்றி அதிகமாக ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். இன்றைக்கு அம்பேத்கர் கொள்கைக்கு யார், யாரோ? சொந்தம் கொண்டாடுகிறார்கள். தமிழகத்தில் அம்பேத்கர் கொள்கைகளை கொண்டு வந்தவர் பெரியார். எல்லோரும் சமம். எல்லோரும் மனிதர்கள் என்பதை திராவிட இயக்கம்தான் கொண்டு வந்தது.

திராவிட மாடல்

வகுப்புக்கு ஒரு பெண் மட்டுமே பயின்று வந்த காலம் மாறி தற்போது 80 சதவீதம் பெண்கள் கல்வி பயில்வதற்கு திராவிட இயக்கமே காரணம். அம்பேத்கர், பெரியார், அண்ணா, கருணாநிதியின் கொள்கைகளை இன்றைக்கு திராவிட மாடல் ஆட்சியாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்திவருகிறார்.

பொறியியல் கல்வி பயிலும் மாணவர்களுக்கு 2 செமஸ்டரில் தமிழை ஒரு பாடமாக கொண்டு வரப்பட்டு விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இன்றைக்கு கலைஞருக்கு பேனா வைப்பது பிரச்சினையாக உள்ளது. அந்த பேனா இல்லையென்றால் நாம் படித்திருக்கவே முடியாது. தலைநிமிர்ந்து நாமெல்லாம் இருக்க அந்த பேனாவே காரணம். பெண்கள் அதிகம் கல்வி கற்க, அடித்தட்டு மக்களுக்கு சமூக நீதி அடிப்படையில் இடஒதுக்கீடு கொடுத்தது கருணாநிதியின் பேனாதான். பெரியார் பல்கலைக்கழக மாணவிகள், பெரியார் மற்றும் கருணாநிதி குறித்து நூல்களை படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

பேனா

14 வயதில் தொடங்கி கடைசி வரை கலைஞரின் பேனா எழுதியதால்தான் எங்களை போன்றவர்கள் கல்லூரிகளில் படிக்க முடிந்தது. மாபெரும் தமிழ்கனவு திட்டத்தில் கல்லூரிக்கு 50 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பேசும் திறனை வளர்க்க உயர்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. எல்லா துறையிலும் மாணவர்கள் தங்களது ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டுக்கு என்று தனியாக கல்விக் கொள்கையை வகுக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். 5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு என்பதை ஏற்க முடியாது. தமிழ்நாடு, தமிழ் உணர்வு என்று செயல்பட வேண்டும். வெளிநாட்டிற்கு ஆங்கிலம், உள்ளூருக்கு தமிழ் என 2 மொழிகள் மட்டுமே தேவை. எனவே இருமொழிக் கொள்கையே தமிழகத்திற்கு போதும். இதை எதிர்த்து எந்த திட்டம் வந்தாலும் அதை மீறி இருமொழிக் கொள்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின நிச்சயம் செயல்படுத்துவார். எங்கு சென்றாலும் மொழி உணர்வு, நாட்டு உணர்வு இருக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் பொன்முடி பேசினார்.

விழாவில் ஆட்சிக்குழு உறுப்பினர் ஹரி கிருஷ்ணன் ராஜ் உள்பட அனைத்து துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பதிவாளர் பாலகுருநாதன் வரவேற்று பேசினார், முடிவில் கருணாநிதி ஆய்வு மைய இயக்குனர் சுப்ரமணி நன்றி கூறினார்.


Next Story