சமூக நீதியை கல்லூரிகளிலும் பாடமாக கொண்டு வர வேண்டும் பெரியார் பல்கலைக்கழக விழாவில் அமைச்சர் பொன்முடி பேச்சு
சமூக நீதியை கல்லூரிகளிலும் பாடமாக கொண்டு வரவேண்டும் என்று பெரியார் பல்கலைக்கழக விழாவில் அமைச்சர் பொன்முடி பேசினார்.
கருப்பூர்,
பெரியார் பல்கலைக்கழகம்
சேலம் கருப்பூர் பெரியார் பல்கலைக்கழகத்தின் 25-வது ஆண்டு நிறைவு விழா மற்றும் பெரியார் பிறந்த நாள் விழா பல்கலைக்கழக கலைஞர் கூட்ட அரங்கில் நடந்தது. விழாவுக்கு துணை வேந்தர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். ஆய்வு மைய இயக்குனர் சுப்பிரமணி வரவேற்றார். இதில் சபாநாயகர் அப்பாவு, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர்.
விழாவில் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:-
பெரியாரை கடவுள் மறுப்பாளர் என்ற ஒற்றை சொல்லோடு கடந்து விடுகிறார்கள். கடவுளுக்கும், அவருக்கும் எந்த சண்டையும் கிடையாது. கடவுள் பெயரால் மனிதர்களை, இழிவு படுத்துபவர்களை மட்டுமே பெரியார் எதிர்த்தார். மற்ற எல்லோரையும் விட கடவுளோடு எந்த பிரச்சினையும் இல்லாத ஒரே மனிதர் பெரியார் தான்.
சனாதன தர்மம்
வைக்கம் பகுதியில் உழைக்கும் மக்கள் சாதியின் பெயரால் இழிவு படுத்தப்பட்டனர். அதனை தட்டி கேட்க நாதியில்லாமல் இருந்தபோது, ஈரோட்டில் இருந்து சென்று திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு எதிராக பெரியார் போராடினார். இது கடவுளுக்கு எதிரான போராட்டம் இல்லை. கடவுளின் பெயரால் மனிதர்களை இழிவு படுத்துபவர்களை எதிர்த்த போராட்டம்.
நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்தபோது இளம் விதவைகள் கணக்கெடுக்கப்பட்டு, தமிழகத்தில் 11,342 பேர் கண்டறியப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் 5 வயதிற்குட்பட்டவர்கள். சனாதன தர்மம் 5 வயதிற்குட்பட்டவர்களை விதவையாக வைத்திருந்தது. இந்த நிலையை மாற்ற போராடியவர் பெரியார். பெரியார் பற்றிய தவறான பிம்பத்தை இளைஞர்கள் மாற்றியமைக்க வேண்டும்.
இவ்வாறு சபாநாயகர் அப்பாவு பேசினார்.
அமைச்சர் பொன்முடி
தொடர்ந்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியதாவது:-
பெரியாருக்கு எந்த கடவுள் மீதும், எந்த மதத்தின் மீதும் கோபம் இல்லை. எல்லோரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று தான் பெரியார் சொன்னார். 50 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி வகுப்பறையில் ஒரேயொரு பெண் பயின்ற நிலையில், இன்றைக்கு அறை முழுவதும் பெண்கள் அமர்ந்து கல்வி பயில்கின்றனர்.
தமிழகத்தில் பள்ளிகளில் சமூகநீதியை பாடமாக கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது பள்ளிகளுக்கு மட்டுமல்ல, கல்லூரிகளிலும் பாடமாக கொண்டு வரப்படவேண்டும்.
கல்வி கொள்கை குழு
குழந்தை திருமணம் கூடாது என்ற நடைமுறையை கொண்டு வந்தது நீதிக்கட்சி தான். பெண்களுக்கு கல்வி வாய்ப்பை கொண்டு வந்தது தி.மு.க.வின் திராவிட மாடல் ஆட்சி. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என உத்தரவிட்டது திராவிட மாடல் ஆட்சி. நாங்கள் அனைவரும் இந்துக்கள் தான். இந்து மதத்திற்கு எதிரானவர்கள் இல்லை. சாதிய அடிப்படையில் வேறுபாட்டுடன் நடத்துவதையே நாங்கள் எதிர்க்கிறோம்.
தமிழ்நாட்டிற்கு தனி கல்வி கொள்கைக்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு மொழி கொள்கை மற்றும் கல்வி திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறது. மருத்துவ கல்விக்கு நீட் தேர்வு வேண்டாம் என்று தொடர்ந்து தெரிவித்து வருகிறோம். 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்றுதான் தமிழக அரசு கல்வி கொள்கையில் திட்டம் வகுத்து வருகிறது. இவ்வாறு அமைச்சர் பொன்முடி பேசினார்.
இதில் சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், எம்.எல்.ஏ.க்கள் வக்கீல் ராஜேந்திரன், அருள், சதாசிவம் மற்றும் பல்கலைக்கழக துறை தலைவர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.