விளையாட்டுக்கான அரசின் திட்டங்களை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்- அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
விளையாட்டுக்கான அரசின் திட்டங்களை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறினார்.
விளையாட்டுக்கான அரசின் திட்டங்களை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறினார்.
முதல்-அமைச்சர் கோப்பை போட்டி
திருவாரூரில் உள்ள டாக்டர் கலைஞர் கருணாநிதி விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடந்தன.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமை தாங்கினார். அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கபடி, சிலம்பம்
தமிழரின் வீர விளையாட்டுக்களான கபடி, சிலம்பம் உள்ளிட்ட போட்டிகளை உள்ளடக்கிய முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் விரைவில் நடத்தப்படும் என 44-வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதில் மாவட்ட, மாநில அளவில் முதல் 3 இடங்களில் வெற்றி பெறும் ஒவ்வொருவருக்கும் பரிசுத்தொகை வழங்க வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.
அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுப்பிரிவினர், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவுகளாக 42 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. மண்டல அளவில் 8 போட்டிகள் நடத்தப்பட்டன. முதல் முறையாக கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. வீரர், வீராங்கனைகள் 10 ஆயிரத்து 306 பேர் இணையதளம் மூலமாக பதிவு செய்து போட்டியில் கலந்து கொண்டனர். பரிசு பெறும் வீரர்களுக்கு பரிசுத்தொகை வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
அரசின் திட்டங்களை...
போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று இதுபோன்ற மேடைகளில் பரிசு வாங்குவதே உண்மையான வெற்றியாகும். விளையாட்டில் அதிக ஆர்வம் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம். திறமையான விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரலாறு காணாத அளவிற்கு ரூ.48 கோடியை ஒதுக்கி உள்ளார்.
தேசிய அளவில் விளையாடக்கூடிய வீரர்களை திருவாரூர் மாவட்டம் பெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டம் வடுவூர் பகுதி திறன் வாய்ந்த கபடி வீரர்கள் உள்ளனர். விளையாட்டின் மூலம் மன அமைதியும், உடல் வலிமையும் மேம்படும். விளையாட்டுக்கான அரசின் திட்டங்களை மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் பூண்டி. கலைவாணன் எம்.எல்.ஏ., தமிழ்நாடுஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக்கழக தலைவர் மதிவாணன், விளையாட்டு ஆணைய திருச்சி மண்டல முதுநிலை மேலாளர் பியூலாஜேன் சுசீலா, மாவட்ட ஊராட்சி தலைவர் பாலசுப்பிரமணியன், மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், திருவாரூர் நகரசபை தலைவர் புவனப்பிரியா செந்தில், ஒன்றியக்குழு உறுப்பினர் முருகேசன், நகரசபை உறுப்பினர் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.