ராமநாதபுரம் வளர்ச்சி மாவட்டமாக மாறும்


ராமநாதபுரம் வளர்ச்சி மாவட்டமாக மாறும்
x
தினத்தந்தி 9 April 2023 12:15 AM IST (Updated: 9 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

6 மாதத்தில் ராமநாதபுரம் வறட்சி இன்றி வளர்ச்சி மாவட்டமாக மாறும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.

ராமநாதபுரம்

சாயல்குடி,

6 மாதத்தில் ராமநாதபுரம் வறட்சி இன்றி வளர்ச்சி மாவட்டமாக மாறும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.

காவிரி குடிநீர்

சாயல்குடி, கடலாடி பகுதிகளில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம், நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சாயல்குடி கிழக்கு குலாம் முகைதீன், மேற்கு ஜெயபாலன், கடலாடி வடக்கு ஆப்பனூர் ஆறுமுகவேல் ஆகியோர் தலைமை தாங்கினர். முன்னாள் மதுரை மேயர் குழந்தைவேலு, முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தனர். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் கிராம வளர்ச்சி நல வாரியத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்துகொண்டு பேசுகையில்,

மாவட்டத்திற்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம், நரிப்பையூர் கடல் நீர் நன்னீராக்கும் திட்டம், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் கொண்டுவரப்பட்டது. இத்திட்டங்கள் கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் பராமரிப்பு இன்றி முடக்கப்பட்டு இருந்தது. தற்போது பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு காவிரி கூட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

வளர்ச்சி மாவட்டம்

மாவட்டத்திற்கு குடிநீர் பற்றாக்குறையை முழுவதுமாக போக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்ததின் பேரில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு ரூ.2288 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் புதிதாக பைப் லைன் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் 6 மாதத்திற்குள் பணிகளை முடிப்பதற்கு துரிதப்படுத்தி குடிநீர் தேவையை பூர்த்தி செய்து ராமநாதபுரம் மாவட்டம் வறட்சி மாவட்டமாக இல்லாமல் வளர்ச்சி மாவட்டமாக மாற்றப்படும்.

வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை கண்மாய்களுக்கு கொண்டு செல்வதற்காக இப்பகுதிகளில் உள்ள கால்வாய்கள் அனைத்தும் தூர் வாருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விவசாயத்திற்கு முன்னுரிமை

வரும் ஆண்டில் வைகையில் இருந்து எஞ்சி வரும் தண்ணீரை முதுகுளத்தூர் தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களில் உள்ள கண்மாய்களுக்கும் கொண்டுவர வழிவகை செய்யப்படும். ராமநாதபுரம் மாவட்டத்தில் விளையும் குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது. எனவே, மிளகாய் விளைச்சல் உள்ள பகுதிகளுக்கு சேமிப்பு கிடங்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்திற்கு வறட்சி நிவாரணம் மற்றும் பயிர் இழப்பீட்டுத்தொகை வழங்க முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். முதுகுளத்தூர் தொகுதியில் தரிசு நிலங்கள் விளைநிலங்களாக மாற்றி விவசாயத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் அமைச்சரின் நேர்முக உதவியாளர் கண்ணன், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் முதுகுளத்தூர் கிழக்கு பூபதி மணி, முதுகுளத்தூர் மத்தி கோவிந்தராஜ், சாயல்குடி நீர் பாசன சங்க தலைவர் ராஜாராம், ஒன்றிய கவுன்சிலர்கள் பிச்சை, வசந்தா கதிரேசன், ஊராட்சி தலைவர்கள் மங்களசாமி ராஜேந்திரன், தென்னரசி செல்ல பாண்டியன், ஜெயலட்சுமி வடமலை, பெரியகுளம் நீர் பாசன சங்க தலைவர் ரவீந்திரன் நாதன், கமுதி காங்கிரஸ் வட்டார தலைவர் பழக்கடை ஆதி, சாயல்குடி நகர் இளைஞர் அணி செயலாளர் விக்னேஷ் ராம், ஒன்றிய பொருளாளர் பாலகிருஷ்ணன், பிரதிநிதி நாகேந்திரன், கடலாடி நகர் செயலாளர் ராமசாமி, கடலாடி வடக்கு ஒன்றிய இளைஞரணி மாரிநாதன், கோகுலம் மருது பாண்டியன், முதுகுளத்தூர் சட்டமன்ற அலுவலர்கள் சத்தியேந்திரன், டோனி சார்லஸ், ரஞ்சித் மணிகண்டன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


Next Story