பெண் ஓதுவார்கள் உள்பட 15 ஓதுவார்களுக்கு பணி நியமன ஆணை -அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்


பெண் ஓதுவார்கள் உள்பட 15 ஓதுவார்களுக்கு பணி நியமன ஆணை -அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்
x

5 பெண் ஓதுவார்கள் உள்பட 15 ஓதுவார்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்.

சென்னை,

இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில், அமைச்சர் சேகர்பாபு, கோவில்களுக்கு நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 5 பெண் ஓதுவார்கள் உட்பட 15 ஓதுவார்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். மேலும், கோவில்களில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த 3 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.

பின்னர், அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவில்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள

15 ஓதுவார்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே 5 கோவில்களில் பெண் ஓதுவார்கள் பணிபுரிந்து வருகின்ற நிலையில், தற்போது புதிதாக நியமிக்கப்பட்டிருக்கின்ற

15 ஓதுவார்களில் 5 பெண் ஓதுவார்கள் நியமனம் என்பது உண்மையிலேயே பெரும் மகிழ்ச்சிக்குரிய நற்செயல் ஆகும். இதுவரை நியமிக்கப்பட்டுள்ள 10 பெண் ஓதுவார்களுமே தி.மு.க. ஆட்சி ஏற்பட்ட பிறகு தான் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

இதுவரை கோவில்களில் தி.மு.க. ஆட்சி ஏற்பட்ட பிறகு 39 ஓதுவார் பணியிடங்கள் நிரப்பப்பட்டு இருக்கின்றன. ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள 183 ஓதுவார் பணியிடங்களில் இதுவரை 107 ஓதுவார்கள் கோவில்களில் பணிபுரிந்து வருகிறார்கள். இதர கோவில்களில் காலியாக இருக்கின்ற ஓதுவார் பணியிடங்களை விரைவில் நிரப்புவதற்குண்டான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

பெண் அர்ச்சகர்கள்

ஏற்கனவே அர்ச்சகர் பயிற்சி பயின்ற 3 பெண்கள் விரைவில் உதவி அர்ச்சகர் பணிக்கு நியமிக்கப்பட இருக்கிறார்கள். அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளில் பயிற்சி முடித்தவர்களுக்கு கோவில்களில் தலைமை அர்ச்சகர்களின் கீழ் உதவி அர்ச்சகர்களாக ஓராண்டுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர்களுக்கு மாதாந்திர ஊக்கத்தொகையாக ரூ.8,000 வழங்கப்படும். இப்பயிற்சியில் சேருவதற்கு 71 பேர் விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் க.மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை சிறப்புப் பணி அலுவலர் ஜெ.குமரகுருபரன், ஆணையர் க.வீ.முரளீதரன், கூடுதல் ஆணையர்கள் அ.சங்கர், ந.திருமகள் உள்பட அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பெண் ஓதுவார் பணிபுரியும் கோவில்கள்

5 பெண் ஓதுவார்கள் பணிபுரிய உள்ள கோவில்களின் விவரம் வருமாறு:-

1.பாடி திருவல்லீஸ்வரர் கோவில் - ஓதுவார் பார்கவி.

2.வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் சுவாமி கோவில் - ஓதுவார் தாரணி.

3.ராயப்பேட்டை சித்தி புத்தி விநாயகர் மற்றும் சுந்தரேஸ்வரர் கோவில் - ஓதுவார் சாருமதி.

4.மயிலாப்பூர் முண்டக கண்ணியம்மன் கோவில் - ஓதுவார் சிவரஞ்சனி.

5.சைதாப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் - ஓதுவார் கோமதி.


Next Story