அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பாக வரவேற்பு அளிக்க வேண்டும் கட்சியினருக்கு அமைச்சர் சிவசங்கர் வேண்டுகோள்


அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பாக வரவேற்பு அளிக்க வேண்டும் கட்சியினருக்கு அமைச்சர் சிவசங்கர் வேண்டுகோள்
x

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பாக வரவேற்பு அளிக்க வேண்டும் கட்சியினருக்கு அமைச்சர் சிவசங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் பாலக்கரையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. இந்த கூட்டத்திற்கு கட்சியின் மாவட்ட அவைத் தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் அரியலூர் மாவட்ட செயலாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு பேசுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம் பஸ் நிலையம் திறப்பு விழா, குன்னம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் போட்டி தேர்வுகளுக்கான நூலகம் திறப்பு விழா, அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மருத்துவ சேவையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்க நாளை (செவ்வாய்க்கிழமை) வருகை தரும் கட்சியின் இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சியினர் சிறப்பாக வரவேற்பு அளிக்க வேண்டும். மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் ஒரே நாடு, ஒரே ஆளும் கட்சி என்று மாற்றி விடுவார்கள். ஆகையால் ஒவ்வொரு கிளைக்கழகங்களிலும் பத்து பேர் கொண்ட பூத் கமிட்டி அமைத்து வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற வேண்டும், என்றார். மேலும் கூட்டத்தில் தி.மு.க. தலைவரும், திராவிட மாடல் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை கொண்டாடும் வகையில், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழகங்கள் சார்பில் இந்த மாதம் முழுவதும் பொதுக்கூட்டங்கள், நலத்திட்ட உதவிகள் போன்றவை நடத்திட வேண்டும். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை காலை 11 மணியளவில் குன்னம் பஸ் நிலையம் திறப்பு விழா மற்றும் குன்னம் சட்டமன்ற அலுவலகத்தில் நூலகம் திறப்பு விழா ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அந்த விழாக்களில் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து கட்சியினர் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளை கழகங்களிலும் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 10 பேர் கொண்ட குழு அமைத்திட வேண்டும், அந்தப்பட்டியலை மாவட்ட கட்சி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், மாவட்ட ஊராட்சி குழு தலைவருமான குன்னம் ராஜேந்திரன், பெரம்பலூர் நகர செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான பிரபாகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும், நகர் மன்ற துணைத் தலைவருமான ஹரிபாஸ்கர் மற்றும் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.


Next Story