பொது சொத்தை சேதப்படுத்திய வழக்கு:கடலூர் கோர்ட்டில் அமைச்சர் சிவசங்கர் ஆஜர்


பொது சொத்தை சேதப்படுத்திய வழக்கு:கடலூர் கோர்ட்டில் அமைச்சர் சிவசங்கர் ஆஜர்
x
தினத்தந்தி 13 May 2023 12:15 AM IST (Updated: 13 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பொது சொத்தை சேதப்படுத்திய வழக்கில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கடலூர் கோர்ட்டில் ஆஜரானார்.

கடலூர்

மணல் குவாரி

அரியலூர் மாவட்டம் செந்துறை சன்னாசிநல்லூருக்கும், கடலூர் மாவட்டம் நெய்வாசலுக்கும் இடையே வெள்ளாறு ஓடுகிறது. இதில் கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த குவாரி தங்களுக்கு தான் சொந்தம் என்று சன்னாசிநல்லூர் மக்கள் கூறி வந்தனர். மேலும் அங்குள்ள சுடுகாடு வரை மணல் அள்ளப்பட்டு வந்ததாக தெரிகிறது.

இதை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து இரு மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்களும் கடந்த 31.1.2015 அன்று ஆற்றை அளவீடு செய்து கல் வைத்து பிரித்தனர். ஆனால் சன்னாசிநல்லூர் மக்கள் அதை ஏற்றுக்கொள்ள வில்லை.

தொடர்ந்து சன்னாசிநல்லூர் கிராம மக்கள் மணல் குவாரியை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்தனர். இதை அறிந்த விருத்தாசலம் கோட்டாட்சியர், 144 தடை உத்தரவை பிறப்பித்தார்.

37 பேர் மீது வழக்கு

இருப்பினும் தடையை மீறி குன்னம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தற்போதைய போக்குவரத்துத்துறை அமைச்சருமான சிவசங்கர் தலைமையில் ஏராளமான பொதுமக்கள் தடையை மீறி போராட்டம் நடத்தியபோது, கலவரம் வெடித்தது. இதில் 9 போலீஸ்காரர்கள் மீது கல்வீசி தாக்கினர். 2 மணல் அள்ளும் எந்திரங்களை பொதுமக்கள் அடித்து உடைத்து சேதப்படுத்தினர்.

இது பற்றி நெய்வாசல் கிராம நிர்வாக அலுவலர் பாரதி கொடுத்த புகாரின் பேரில் பொது சொத்துகளை சேதப்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், அரசுப்பணியை செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் சிவசங்கர் உள்பட 37 பேர் மற்றும் சிலர் மீது ஆவினங்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

அமைச்சர் சிவசங்கர் ஆஜர்

இந்த வழக்கு கடலூர் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மற்றும் எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 4 பேர் இறந்து விட்டனர். மற்றவர்கள் மீது வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை நகல் பெறுவதற்காக அமைச்சர் சிவசங்கர் உள்பட 26 பேர் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி வனஜா முன்பு நேற்று ஆஜரானார்கள். மாயவேல், கார்த்திகேயன், இளங்கோவன், ராஜேந்திரன் உள்பட 7 பேர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதையடுத்து குற்றப்பத்திரிகை நகல் வழங்காமல், அனைவரையும் அடுத்த மாதம்(ஜூன்) 12-ந்தேதி நேரில் ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டதோடு, வழக்கை தள்ளி வைத்தார். மேலும் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்த 7 பேருக்கும் பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் கவுதமன் ஆஜரானார்.


Next Story