கால்நடை மருத்துவ படிப்புக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்த மாணவருக்கு அமைச்சர் சிவசங்கர் பாராட்டு
கால்நடை மருத்துவ படிப்புக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்த மாணவருக்கு அமைச்சர் சிவசங்கர் பாராட்டு தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டம், பொய்யூர் கிராமத்தை சேர்ந்த முருகேசன்-தேவகி தம்பதியின் மகன் ராகுல் காந்த். இவரது தந்தை முருகேசன் சைக்கிள் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். வறுமையான சூழ்நிலையிலும் மாணவர் ராகுல் காந்த் சிறப்பாக கல்வி கற்று பிளஸ்-2 பொதுத்தேர்வில் 600-க்கு 588 மதிப்பெண்கள் பெற்றார். மேலும், மாணவர் ராகுல் காந்த் குடும்ப சூழ்நிலை காரணமாக மருத்துவ படிப்பு ஆயத்த தேர்வை எதிர் கொள்ளாமல், கால்நடை இளநிலை மருத்துவ படிப்பிற்கு பதிவு செய்தார். இதன் மூலமாக கால்நடை இளநிலை மருத்துவ தரவரிசைப் பட்டியலில் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். மேலும் அவர் மேற்படிப்புக்கு தேவையான உதவிகளை செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
இதைத்தொடர்ந்து மாணவர் ராகுல் காந்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டி, டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அவரது அறிவுறுத்தலின்படி அமைச்சர் சிவசங்கர், நேற்று காலை பொய்யூர் கிராமத்தில் உள்ள மாணவர் ராகுல் காந்த் வீட்டிற்கு நேரடியாக சென்று, அவரைச் சந்தித்து மாணவர் ராகுல் காந்திற்கு வாழ்த்து தெரிவித்ததுடன், அவர் உயர்கல்வி பயில்வதற்கான தேவைகள் குறித்தும் அவரிடம் நேரடியாக கேட்டறிந்தார்.
மேலும், மாணவர் உயர்கல்வி படிப்பதற்குத் தேவையான உதவிகள் மேற்கொள்ளப்படும் என்று முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளதாக மாணவர் ராகுல் காந்த் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் அமைச்சர் தெரிவித்தார். அப்போது மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, தாசில்தார் கண்ணன் மற்றும் மாணவரின் பெற்றோர் உடனிருந்தனர்.