அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆ.ராசா எம்.பி. உருவப்படங்கள் எரிப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆ.ராசா எம்.பி. உருவப்படங்கள் எரிக்கப்பட்டன.
பெரம்பலூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் செல்வராஜ் தலைமையில், அக்கட்சியை சேர்ந்த சிலர் நேற்று மாலை 3 மணியளவில் பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் முன்பு உள்ள சாலைக்கு வந்தனர். பின்னர் அவர்கள், சனாதனம் குறித்து தவறாக பேசியதாக தி.மு.க. இளைஞரணி செயலாளரும், விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் உருவபொம்மையையும், உருவப்படத்தையும் மற்றும் தி.மு.க. துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி.யின் உருவப்படத்தையும் கொண்டு வந்து, தீ வைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது அவர்கள் தி.மு.க. மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆ. ராசா எம்.பி. ஆகியோரை கண்டித்தும், சனாதனத்தை காப்போம் என்றும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பா.ஜ.க.வை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 12 பேரை கைது செய்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.